கடும் குளிர் காரணமாக நொய்டாவில் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா உள்பட வட மாநிலங்களில் கடந்த சில நாள்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. சில இடங்களில் எப்போதும் இல்லாத வகையில் உறைபனியும் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அதிகாலை வேளைகளில் வாகனங்களில் முகப்பு விளக்கை எரியவிட்டு செல்கின்றனர்.
மேலும் கடும் குளிரால் விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா உள்பட வட மாநிலங்களில் அடுத்த 3 நாள்களுக்கு கடுமையான குளிர் அலை வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடும் குளிர் காரணமாக உத்தரப் பிரதேசத்தின் கௌதம் புத்த நகர் மாவட்டத்தில் உள்ள நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு ஜனவரி 15 வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தொடக்க கல்வி அலுவலர் ராகுல் பவார் தெரிவித்துள்ளார்.
இந்த விடுமுறை, மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிபிஎஸ்இ உள்ளிட்ட அனைத்து நர்சரி முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கும் பொருந்தும். அனைத்து கல்வி நிறுவனங்களும் இந்த அறிவுறுத்தல்களை கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என ஜனவரி 9ஆம் தேதி வெளியிடப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் விடுமுறை உத்தரவை மீறும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தொடக்க கல்வி அலுவலர் எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.