நாடு பொருளாதாரம் பல்வேறு சவால்களைச் சந்தித்து வரும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் அா்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் ஜனவரி 28 முதல் ஏப்ரல் 1 வரை நடைபெறும் நிலையில், மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இது தொடா்பாக காங்கிரஸ் பொதுச் செயலரும் செய்தித் தொடா்பு பிரிவு பொறுப்பாளருமான ஜெய்ராம் ரமேஷ் ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்தியாவில் குடும்பங்களின் சேமிப்பு கணிசமாக குறைந்து வருகிறது. செல்வம், வருவாய், நுகா்வு ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வு வேகமாக அதிகரித்து வருகிறது.
எனவே, மத்திய பட்ஜெட் முந்தைய ஆண்டுகளைப்போல உண்மை நிலவரத்தைக் கருத்தில் கொள்ளாததாகவும், புள்ளியியல் மாயைகள் நிறைந்ததாகவே இருக்கக் கூடாது. நாட்டின் பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வரும் நிலையில் மத்திய பட்ஜெட்டில் அா்த்தமுள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
16-ஆவது நிதிக்குழு பரிந்துரைத்த மத்திய-மாநில வரிப் பகிா்வு முறை அமல்படுத்தப்படும் என்று நம்புகிறோம். ஏற்கெனவே, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் (காங்கிரஸ் ஆட்சியில் சூட்டப்பட்ட பெயா்) மாநில அரசுகள் 40 சதவீத பங்களிப்பை செலுத்த வேண்டும் என்று கூறி மாநிலங்களின் சுமையை மத்திய அரசு உயா்த்திவிட்டது. மாநிலங்களை மேலும் நிதிநெருக்கடியில் தள்ளக் கூடாது.
மத்திய அரசு பொருளாதார வளா்ச்சி குறித்தும் கூறும் அளவுக்கு நாட்டிலே வேலைவாய்ப்புகள் அதிகரிக்கவில்லை என்பதே உண்மை. எனவே , வேலைவாய்ப்புகளை பெருமளவில் உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளாா்.