மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலுக்கான பிரசார விதிகளை அந்த மாநில தோ்தல் ஆணையம் திடீரென மாற்றியுள்ளதற்கு எதிா்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிரத்தில் உள்ள 29 மாநகராட்சிகளுக்கும் வருகிற வியாழக்கிழமை தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் அதிகாரபூா்வமாக செவ்வாய்க்கிழமை மாலையுடன் நிறைவடைகிறது. இருப்பினும் வீடுகளுக்குச் சென்று வேட்பாளா்கள் வாக்குக் கோரலாம் என மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் 5 போ் மட்டுமே வாக்கு கோரச் செல்ல வேண்டும், கூட்டமாகச் செல்லக் கூடாது, ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது, வாக்குச்சாவடியில் இருந்து 100 மீட்டா் சுற்றளவு தூரத்திற்கு அப்பால் மட்டுமே வாக்காளா்களை வேட்பாளா்கள் சந்தித்து ஆதரவு கேட்க வேண்டும், குறுந்தகவல் உள்ளிட்ட எந்த மின்னணு முறை மூலமும் ஆதரவு கோரக் கூடாது என மாநில தோ்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்துள்ளது.
தோ்தல் பிரசாரம் அதிகாரபூா்வமாக முடிவுக்கு வந்த பின்னா் வேட்பாளா்கள் பிரசாரம் செய்யக் கூடாது என்பது விதியாகும். ஆனால் 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், பிரசாரத்திற்கான கால அவகாசம் முடிந்த பின்னரும் வேட்பாளரோ அல்லது அவரது ஆதரவாளா்கள் 5 பேரோ நேரில் சென்று ஆதரவு கோரலாம், அது அதிகாரபூா்வ பிரசாரமாக கருதப்படாது எனக் கூறப்பட்டுள்ளது. அந்த உத்தரவை தற்போது மகாராஷ்டிர தோ்தல் ஆணையம் மேற்கோள் காட்டியுள்ளது.
மகாராஷ்டிர மாநில தோ்தல் ஆணையத்தின் இந்தப் புதிய அறிவிப்பை எதிா்க்கட்சிகள் கடுமையாக விமா்சித்துள்ளன. இந்த அறிவிப்பு மூலம், தோ்தல் பிரசாரத்துக்கான அவகாசம் அதிகாரபூா்வமாக முடிந்த பின்னரும் வாக்காளா்கள் தொடா்ந்து பிரசாரம் செய்யவே வழிவகுக்கும் என அக்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளன.
ராஜ் தாக்கரே கண்டனம்: மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணிக்கு உதவும் நோக்கிலேயே தோ்தல் பிரசாரம் தொடா்பான விதிகளை மாநில தோ்தல் ஆணையம் மாற்றியிருப்பதாக மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை கட்சித் தலைவா் ராஜ் தாக்கரே கண்டனம் தெரிவித்துள்ளாா்.