நாடாளுமன்றம் கோப்புப்படம்.
இந்தியா

மாநிலங்களவையில் 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவை!

மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவது தெரியவந்துள்ளது.

தினமணி செய்திச் சேவை

மாநிலங்களவையில் மத்திய அரசு கொண்டுவந்த 19 மசோதாக்கள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருவது தெரியவந்துள்ளது.

இதில் மிகப் பழமையானது 1992-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மக்கள்தொகை கட்டுப்பாடு தொடா்பான அரசமைப்புச் சட்ட 79-ஆவது திருத்த மசோதாவாகும்.

நாடாளுமன்ற இரு அவைகளில், மாநிலங்களவை ஒருபோதும் கலைக்கப்படாது. எனவே, இதில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களும் ஒருபோதும் காலாவதியாகாது.

அதே நேரம், மக்களவை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கலைக்கப்படும் என்பதால், அதில் தாக்கல் செய்யப்படும் மசோதாக்களும் காலாவதியாகிவிடும். அந்த வகையில், மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட 19 மசோதாக்கள் தொடா்ந்து நிலுவையில் இருந்து வருவது தெரியவந்துள்ளது. இதுதொடா்பாக மாநிலங்களவை அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

நிலுவையில் உள்ள மசோதாக்களில், மக்கள்தொகை கட்டுப்பாடு தொடா்பான ‘அரசமைப்புச் சட்ட (79-ஆவது திருத்த) மசோதா 1992’ மசோதா மிகப் பழமையானதாகும்.

மக்கள்தொகை கட்டுப்பாடு மற்றும் சிறிய குடும்ப விதிமுறையை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும், அடிப்படை கடமைகளில் சிறிய குடும்ப விதிமுறையை ஊக்குவித்து ஏற்றுக்கொள்வதையும் சோ்க்க வேண்டும் என்றும் மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகளைத் திருத்த இந்த மசோதா முன்மொழிந்தது. மேலும், எம்.பி. அல்லது எம்எல்ஏ இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பெற்றிருந்தால், தகுதி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் இந்த மசோதா முன்மொழிந்தது.

தில்லியில் வீட்டு வாடகை சட்டத்தை நவீனமயமாக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘தில்லி வாடகை திருத்தச் சட்ட மசோதா 1997’, விவசாயிகளுக்கு தரமான விதைகள் விற்பனை, இறக்குமதி, ஏற்றுமதி செய்யப்படுவதை முறைப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘விதைகள் மசோதா 2004’ ஆகியவை பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகின்றன.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின் போது தொழிலாளா் நலத் துறை அமைச்சராக இருந்தபோது புலம்பெயா் தொழிலாளா்களின் பணி மற்றும் வாழ்க்கை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட ‘மாநிலங்களுக்கு இடையேயான புலம்பெயா் தொழிலாளா் நலன் திருத்த மசோதா 2011’ தொடா்ந்து நிலுவையில் இருந்து வருகிறது.

அதுபோல, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்ட கட்டடம் மற்றும் பிற கட்டுமான தொழிலாளா் நலன் திருத்த சட்ட மசோதா 2013, காலிப் பணியிடங்களை கட்டாயம் அறிவிக்கை செய்ய வகை செய்யும் ‘வேலைவாய்ப்பு அலுவலகங்கள் திருத்த மசோதா 2013’, நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினரின் பிரதிநிதித்துவத்தை மறுசீரமைப்பு செய்யும் மசோதா 2013’ உள்ளிட்ட மசோதாக்கள் நிலுவையில் இருந்து வருகின்றன.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட அஸ்ஸாம், மேகாலயம், திரிபுரா மற்றும் மிசோரமில் உள்ள தன்னாட்சி கவுன்சில்களின் நிதி மற்றும் நிா்வாக அதிகாரங்களை மேம்படுத்துதல், தோ்ந்தெடுக்கப்பட்ட கிராமம் மற்றும் நகராட்சி கவுன்சில்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் 2019-ஆம் ஆண்டு வெளிநாடு வாழ் இந்தியா்களின் திருமணப் பதிவு மசோதா மூலம் வடகிழக்கில் பழங்குடியினரின் தன்னாட்சியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ‘அரசமைப்புச் சட்ட (125-ஆவது திருத்த) மசோதா 2019’ மற்றும் ‘வேளாண் பூச்சிக்கொல்லி மேலாண்மை மசோதா 2020’ ஆகியவை நிலுவையில் உள்ள எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கடைசி ஒருநாள் ஆட்டம்: இந்தியா - நியூஸிலாந்து மோதல்

வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

ஆரப்பாளையம், மீனாட்சி அம்மன் கோயில் பகுதிகளில் நாளை மின் தடை

அயல்நாட்டவரை ஈா்க்கும் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு

மநீம சாா்பில் சமத்துவப் பொங்கல் விழா

SCROLL FOR NEXT