மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரம், ஒரு புதிய மாதிரி பொலிவுறு நகரம் என்று மத்திய அரசு கூறிவந்தது. ஆனால், சுத்தமான குடிநீர் இல்லாத இந்தூர் மாதிரி பொலிவுறு நகரமா? என மத்திய அரசுக்கு ராகுல் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சனிக்கிழமை காலை மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் வந்து, மாசடைந்த குடிநீரால் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில், மாசடைந்த குடிநீரைக் குடித்த நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். 20 பேர் பலியானதாகவும், ஏராளமானோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இன்று பாம்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நான்கு பேரை நேரில் சந்தித்துப் பேசிய ராகுல் காந்தி, மாசடைந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்ட பகீரதபுரா பகுதிக்கும் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களிடம் பல்வேறு தகவல்களை கேட்டறிந்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், மாசடைந்த குடிநீரால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தேன். ஏராளமானோர் பலியாகியிருக்கிறார்கள். பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். மத்திய அரசு, நாட்டில் பொலிவுறு நகரங்களை உருவாக்குவதாக உறுதி அளிக்கிறது. ஆனால், இந்த புதிய பொலிவுறு நகரத்தில், மக்கள் குடிக்கக் கூட சுத்தமான தண்ணீர் கிடைக்கவில்லை. மாசடைந்த குடிநீரைக் குடித்து மக்கள் பலியாகிறார்கள். ஆனால், மத்திய அரசு பொலிவுறு நகரத்தின் மாதிரி இந்த நகரம் என்று கூறுகிறது என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.
அரசுதான் இதற்கு பொறுப்பேற்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும். இன்றைய நாளில் கூட, இங்கு சுத்தமான குடிநீர் என்பது கிடைக்கவில்லை. ஒரு எதிர்க்கட்சித் தலைவராக, அவர்களது குரலை எதிரொலிக்கிறேன். இது எனது பொறுப்பு, கடமை. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் துணை நிற்கிறேன் என்று கூறினார்.
இந்தூர் நகரம் சுத்தமான குடிநீர் கூட இல்லாத ஒரு புதிய மாடல் ஸ்மார்ட் சிட்டி என்று கூறி, மத்திய அரசை கடுமையாக சாடினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.