அருணாசலப் பிரதேசத்தில் உறைந்திருந்த ஏரியின் மேற்பரப்பு உடைந்ததில் அதன் தண்ணீரில் மூழ்கி இரண்டு சுற்றுலாப் பயணிகள் பலியானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ஏழு சுற்றுலாப் பயணிகள் கொண்ட குழு, தவாங் மாவட்டத்தில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள சேலா ஏரிக்கு வெள்ளிக்கிழமை சென்றுள்ளனர்.
அதில், ஒருவர் உறைந்த ஏரியின் நடுப்பகுதிக்குச் சென்றபோது பனி உடைந்து, அவர் தண்ணீரில் மூழ்கினார்.
அவரைக் காப்பாற்ற முயன்ற மேலும் இரண்டு சுற்றுலாப் பயணிகளும் உறைபனித் தண்ணீரில் மூழ்கினர். கடுமையான வானிலைக்கு மத்தியில் இரண்டு பேர் மீட்கப்பட்டனர்.
ஒருவர் பலியான நிலையில் மற்றொருவர் உடனடி மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றப்பட்டார். மூன்றாவது நபரைப் பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
வெள்ளிக்கிழமை தற்காலிகமாக நிறுத்தப்பட்ட மீட்புப் பணிகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும் என்று தவாங் மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனிடையே மற்ற சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள ராணுவ முகாம்களில் தங்கவைக்கப்பட்டு, தேவையான உதவிகள் வழங்கப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளூர் நிர்வாகம் வெளியிடும் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் எனவும் ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.