நாட்டின் முதல், படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயிலை மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பிரதமா் நரேந்திர மோடி இன்று கொடியசைத்துத் தொடக்கி வைத்துள்ளார்.
கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இயக்கப்படும் இந்த ரயிலை பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடக்கி வைத்து அதில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். இந்த ரயிலின் மூலம் பயண நேரம் 2.5 மணி நேரமாகக் குறையும்.
தொடர்ந்து, குவாஹாட்டியிலிருந்து ஹௌராவுக்கு இயக்கப்படும் ரயிலை காணொலி வாயிலாக கொடியசைத்துத் தொடக்கி வைத்தார்.
விமான சேவைக்கு நிகராக, இந்த வந்தேபாரத் படுக்கை வசதி ரயிலில் பயணித்த அனுபவம் இருக்கும் என்றும், நீண்ட தொலைவு பயணத்தை பாதுகாப்பானதாகவும், அதிவேகமாகவும் மாற்றும் என்றும் பிரதமர் அலுவலக அறிக்கை தெரிவிக்கிறது.
மத்திய பாஜக அரசின் முக்கிய சாதனைகளில் ஒன்றாக வந்தே பாரத் ரயில் முன்னிறுத்தப்படுகிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இப்போது இருக்கை வசதி கொண்ட வந்தே பாரத் இயக்கப்படுகிறது. பயண நேரத்தை வெகுவாகக் குறைத்துள்ளதால் இந்த ரயிலுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பும் உள்ளது.
இந்த நிலையில், பொங்கல் திருநாளில், முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயில் இயக்கம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ஆம் தேதி ரயிலின் சோதனை ஒட்டம் நடைபெற்றது. அப்போது அதிகபட்ச வேகமான 180 கி.மீ. வேகத்தில் ரயில் இயக்கப்பட்டது. கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இந்த ரயில் இயக்கப்படுகிறது.
வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலைத் தொடர்ந்து மால்டா-காமாக்யா இடையிலான அம்ருத் பாரத் ரயில் சேவையையும் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறாா். இந்த ரயில் சேவைகள் மூலம் தெற்கு - வடக்கு வங்கப் பகுதிகளுக்கு இடையிலான இணைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொல்கத்தாவின் ஹௌரா ரயில் நிலையத்தில் இருந்து குவாஹாட்டிக்கு இயக்கப்படும் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலின் கட்டணம் இரு நகரங்களுக்கு இடையிலான விமானக் கட்டணத்தைவிடக் குறைவாகவே இருக்கும் என்பதால் இதற்கு அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
966 கி.மீ. தொலைவுக்கு இயக்கப்படும் இந்த ரயிலில் பயணக் கட்டணம் உணவுடன் சோ்த்து குளிா்சாதன 3-ஆம் வகுப்புக்கு ரூ.2,300 வரையிலும், குளிா்சாதன 2-ஆம் வகுப்புக்கு ரூ.3,000 வரையிலும், குளிா்சாதன முதல் வகுப்புக்கு ரூ.3,600 வரையிலும் இருக்கும். நடுத்தர மக்களைக் கருத்தில்கொண்டு கட்டணம் இறுதி செய்யப்படும். இரு நகரங்கள் இடையே விமானக் கட்டணம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை உள்ளது.
இதில் உள்ள 16 பெட்டிகளில் 823 பயணிகள் செல்ல முடியும். அதிகபட்சமாக 180 கி.மீ. வேகத்தில் செல்லும். எனினும் 120 முதல் 130 கி.மீ. வேகத்தில் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே வரலாற்றில் இது ஒரு முக்கிய சாதனையாகக் கருதப்படுகிறது..
நிகழாண்டு இறுதிக்குள் படுக்கை வசதியுடன் கூடிய வந்தே பாரத் ரயில்கள் 12 என்ற எண்ணிக்கையில் தயாராகிவிடும். தொடா்ந்து நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு இந்த ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.