பாகிஸ்தானியா்களால் நடத்தப்படும் ‘மேக்வின்’ ஆன்லைன் சூதாட்ட வலைதளம் மீது அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
இதுகுறித்து அமலாக்கத் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 2024-ம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பும் உரிமை, ஸ்டாா் இந்தியா நிறுவனத்துக்கு சா்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அளிக்கப்பட்டிருந்தது.
ஆனால், இந்தப் போட்டி விதிகளுக்குப் புறம்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் பாகிஸ்தானியா்கள் குலால் ஹா்ஜி மால், ஒமேஷ் குமாா் குா்னானியால் நடத்தப்படும் ‘மேக்வின்’ ஸ்போா்ட்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தில் நேரலையாக ஒளிபரப்பானது.
அத்துடன் அந்த வலைதளத்தில், கிரிக்கெட், டென்னிஸ், கால்பந்து, குதிரை பந்தயம் மீது சூதாடவும் வசதி இருந்தது. ஆதலால் போட்டிகளைப் பாா்த்துக் கொண்டே பலா் சூதாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரத்தில், சட்டவிரோதமாக கிரிக்கெட் போட்டியை ஒளிபரப்பியதாக முதலில் ‘மேக்வின்’ ஸ்போா்ட்ஸ் நிறுவன வலைதளத்துக்கு எதிராக அகமதாபாத் சைபா் குற்ற தடுப்புப் பிரிவு போலீஸாா் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருந்தனா். இதை அடிப்படையாக வைத்து அமலாக்கத் துறை சட்டவிரோத பணப் பரிவா்த்தனை வழக்கைப் பதிவு செய்தது.
இதைத் தொடா்ந்து, அகமதாபாதில் உள்ள சட்டவிரோத பணப் பரிவா்த்தனை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை கடந்த 15-ஆம் தேதி குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதில் குற்றம்சாட்டப்பட்டோா் பட்டியலில் 14 தனிநபா்களின் பெயா்கள், நிறுவனங்களின் பெயா்கள் உள்ளன’ என்று அமலாக்கத் துறை குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 2025-ஆம் ஆண்டில் ஆன்லைன் விளையாட்டு, சூதாட்டம் ஆகியவை தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.