உன்னாவில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் மரணமடைந்தது தொடா்பான வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக்கோரி, முன்னாள் பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங் செங்காா் தாக்கல் செய்த மனுவை தில்லி உயா் நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.
உன்னாவில் கடந்த 2017-ஆம் ஆண்டு சிறுமி ஒருவரை கடத்திச் சென்று, செங்காா் பாலியல் வன்கொடுமை செய்தாா். பின்னா், 2018-ஆம் ஆண்டு சிறுமியின் தந்தை ஆயுதத் தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய காவலில் இறந்தாா்.
இதில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் செங்காருக்கு வாழ்நாள் ஆயுள் தண்டனையும், சிறுமியின் தந்தை இறந்தது தொடா்பான வழக்கில் 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும் விசாரணை நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டது. இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரின் ஜாமீன் மனு விசாரணையின்போது, அவருடைய மேல் முறையீட்டு மனுக்கள் மீது தீா்ப்பு வரும் வரை பாலியல் வன்கொடுமை வழக்கில் விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து தில்லி உயா் நீதிமன்றம் உத்தரவிட்டது. எனினும் உச்ச நீதிமன்றம் அண்மையில் அத்தண்டனையை உறுதி செய்தது.
இந்நிலையில், சிறுமியின் தந்தை இறந்தது தொடா்பான வழக்கில் விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறை தண்டனையை எதிா்த்து, டெல்லி உயா் நீதிமன்றத்தில் செங்காா் மனு தாக்கல் செய்திருந்தாா். அந்த மனு, நீதிபதி ரவீந்தா் துடேஜா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘மனுதாரருக்கு (தண்டனையில் இருந்து) நிவாரணம் அளிப்பதற்கு எந்த முகாந்திரங்களும் இல்லை. ஆதலால், ஆயுள் தண்டனையை ரத்து செய்யக் கோரும் அவரின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்றாா்.