பாஜக தேசியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிதின் நவீனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்தார். கட்சி தொடர்பான விஷயங்களில் இந்த இளம் தலைவர் தனக்கும் தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக அவர் பேசியதாவது,
தில்லியில் உள்ள பாஜக கட்சித் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் பிரதமர் மோடி, 45 வயதான நிதின் நவீனை, இந்தியாவில் பெரும் மாற்றங்களைக் கண்ட புதிய தலைமுறை இளைஞர் என்று வர்ணித்தார்.
பூத் நிலை முதல் தேசிய நிலை வரை பல்வேறு கட்சிப் பதவிகளுக்கான தேர்தல்கள் நடைபெற்று நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கட்சித் தலைமை அலுவலகத்தில் நிதின் நவீன் பாஜகவின் தேசியத் தலைவராக அறிவிக்கப்பட்டார்.
கட்சி விஷயங்களைப் பொருத்தவரை, நிதின் நவீனுக்கு நான் ஒரு தொண்டன், அவர் என் தலைவர்.
நிதின் நவீன் நம் அனைவருக்கும் தலைவர், அவருடைய பொறுப்பு பாஜகவை நிர்வகிப்பது மட்டுமல்ல, அனைத்து என்டிஏ கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பை உறுதி செய்வதுமாகும் என்று அவர் கூறினார்.
வானொலியில் செய்திகளைக் கேட்டதிலிருந்து, செய்யறிவு பயன்படுத்துவது வரை நன்கு தேர்ச்சி பெற்ற காலத்தைச் சேர்ந்தவர் நிதின் நவீன். அவரிடம் துடிப்பும், மிகுந்த அனுபவமும் உள்ளன.
அடல் பிஹாரி வாஜ்பாய், லால் கிருஷ்ண அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் தலைமையில், பாஜக பூஜ்ஜியத்திலிருந்து உச்சிக்குப் பயணம் மேற்கொண்டது.
இந்த நூற்றாண்டில், எம். வெங்கையா நாயுடு, நிதின் கட்கரி போன்ற தலைவர்கள், நமது பல மூத்த தலைவர்கள் இணைந்து, அமைப்பை விரிவுபடுத்தினர். ராஜ்நாத் சிங்கின் தலைமையில் முதல் முறையாக பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.
பின்னர், அமித் ஷாவின் தலைமையில், பாஜக பல மாநிலங்களில் அரசு அமைத்ததுடன், மத்தியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்தது. ஜெ.பி. நட்டாவின் தலைமையில், பாஜக பஞ்சாயத்து முதல் நாடாளுமன்றம் வரை மேலும் வலுப்பெற்றது இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.