அகமதாபாத்தில், கையில் சிகரெட்டுடன் 120 கிலோ மீட்டர் வேகத்தில் இளைஞர் ஓட்டிச் சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர்.
உதைப்பூர் மாவட்டத்தில், சனிக்கிழமை காலை இந்த விபத்து நடந்துள்ளது. இது தொடர்பான விடியோக்கள் இப்போது வெளியாகி, பார்ப்பவர்களை பதற வைக்கிறது.
இளைஞர் ஓட்டிவந்த காரின் வேகம் காரணமாக, எதிரே சாலையில் வந்த கார் மீது இளைஞர்கள் வந்த கார் மோதியதில், இரண்டு வாகனங்களும் கடுமையாக சேதமடைந்து, ஒன்றோடு ஒன்று சிக்கிக்கொண்டது. வாகனங்களுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்பதே பெரும் சிரமமாகிப்போனதாகக் கூறப்படுகிறது.
காரின் பாகங்களை உடைத்துத்தான் உள்ளே இருந்தவர்களையும் உடல்களையும் மீட்புப் படை மீட்டுள்ளது.
பலியானவர்கள், முகமது அயன் (17), அதில் குரேஷி (14), ஷேர் முகமது (19), குலாம் க்வாஜா (17) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர்களுடன் வந்த மேலும் 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அயன் பிறந்தநாளைக் கொண்டாட அவரது நண்பர்கள் ஒன்றாக வெளியே வந்த போது, எதிரே வந்த கார் மீது மோதியிருக்கிறது.
எதிர் திசையில் வந்த காரில் இருந்த நான்கு பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து நடந்த போது இளைஞர்கள் ஓட்டி வந்த காரில் எடுத்த விடியோவில், கார் ஓட்டிய இளைஞர் கையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருக்கிறார். கார் 120 கி.மீ. வேகத்தில் பயணிக்கிறது. கார் சீட் பெல்ட் அணியவில்லை என்பதை குறிக்கும் சமிக்ஜை காரில் ஒளிர்கிறது. ஒரு வினாடியில் கார் எதிர் திசையில் திரும்பி விபத்துக்குள்ளாவது பதிவாகியிருக்கிறது.
மேலும், அந்த விடியோவில், வேகத்தைக் குறைக்குமாறு, காரில் இருந்த ஒருவர் கதறுகிறார். ஆனால், காரில் ஒலிக்கும் பாடலின் சப்தத்தில், கார் ஓட்டும் இளைஞர் அதனைக் கண்டுகொள்ளவில்லை. இந்த விடியோவை விசாரணை அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்துக்கான காரணத்தை கண்டறிந்து வருகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.