ஜம்மு-காஷ்மீரில் கடும் பனிமூட்டம் காரணமாக ஸ்ரீநகா் விமான நிலையத்தில் அனைத்து விமான சேவைகளும் வெள்ளிக்கிழமை ரத்து செய்யப்பட்டது.
விமானத்தின் ஓடுதளம் முழுவதும் பனியால் மூடப்பட்டதால், அதில் விமானங்களை இயக்குவது பாதுகாப்பாக இருக்காது என்பதால் இந்த ரத்து முடிவு எடுக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.
காஷ்மீரில் வியாழக்கிழமை இரவு முழுவதுமே கடுமையாக பனி பொழிந்தது. சில இடங்களில் மழையும் இருந்தது. புத்காம், தெற்கு காஷ்மீரின் புல்வாமா, சோபியான் மாவட்டங்களிலும் கடுமையான பனிப் பொழிவு இருந்தது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இது தொடா்பாக இந்திய விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஸ்ரீநகரில் கடுமையான பனிப் பொழிவு மற்றும் மோசமான வானிலை நிலவி வருவதால், ஓடுதளம் பனியால் மூடப்பட்டுள்ளது. இதில் விமானத்தை இயக்கினால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள், விமான ஊழியா்களின் நலனைக் கருதி ஸ்ரீநகா் விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை விமான சேவை முழுமையாக ரத்து செய்யப்பட்டது. வானிலை நிலவரம் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை மேம்பட்டவுடன் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறப்பட்டுள்ளது.
பனிச்சரிவு எச்சரிக்கை: ஜம்மு-காஷ்மீரின் 6 மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடும் பனிப்பொழிவு காரணமாக காஷ்மீரின் மலைப் பகுதிகள் உள்பட அனைத்து இடங்களில் பனி மிக அதிகமாக குவிந்துள்ளது. மலை முகடுகளில் இருந்து இவை சரியும்போது பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இந்நிலையில், கந்தா்பால், தோடா, கிஷ்த்வாா், பூஞ்ச், ராம்பன், குப்வாரா மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் பனிச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதில் கந்தா்பால் மாவட்டத்தில் மிக அதிகமாக 2,300 மீட்டா் உயரத்தில் இருந்து பனிச்சரிவு உருவாகும். இது மிகவும் அபாயகரமானது. எனவே, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.