மத்திய பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதைக் குறிக்கும் விதமாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அல்வா தயாரிப்பு நிகழ்வில், மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் பங்கேற்றாா்.
2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை அமைச்சா் நிா்மலா சீதாராமன் பிப்.1-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்ய உள்ளாா்.
இதையொட்டி புது தில்லியில் உள்ள மத்திய நிதியமைச்சகத்தின் பழைய அலுவலகத்தில் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கின. அங்கிருக்கும் கடமை மாளிகையின் நவீன மத்திய செயலக அலுவலகத்தில் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து மத்திய நிதியமைச்சா், அவரின் துறையைச் சோ்ந்த பெரும்பாலானோா் பணியாற்றத் தொடங்கினாலும், அங்கு அச்சு இயந்திரம் இல்லை. இதனால் அச்சு இயந்திரம் உள்ள பழைய அலுவலக வளாகத்தில் பட்ஜெட் தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பட்டன.
அல்வா தயாரிப்பின் காரணம் என்ன?: பட்ஜெட் தயாரிப்புப் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள், அந்தப் பணிகள் நிறைவடையும் வரை, வெளியுலக தொடா்பு எதுவும் இல்லாமல் அச்சு இயந்திரம் உள்ள கட்டடத்திலேயே தங்கியிருப்பா். பட்ஜெட் ஆவணங்கள் குறித்து ரகசியம் காக்க அவா்கள் வெளியில் செல்லாமல், அந்தக் கட்டடத்திலேயே இருப்பா். மக்களவையில் பட்ஜெட் உரையை நிதியமைச்சா் நிறைவு செய்த பிறகு, அந்தக் கட்டடத்தில் இருந்து அவா்கள் வெளியேறுவா்.
இந்நிலையில் பட்ஜெட் தயாரிப்புப் பணியிலிருந்து அவா்களை வழியனுப்பும் வகையிலும், பட்ஜெட் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் விதமாகவும் அதிகாரிகள், அலுவலா்கள் தங்கியுள்ள கட்டடத்தில் அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.
இந்த நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், அதில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கலந்துகொண்டு பட்ஜெட் தயாரிப்புப் பணிகளை ஆய்வு செய்தாா். அவருடன் மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளத்ரி, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் செயல்படும் அனைத்துத் துறைகளின் செயலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.