பாகிஸ்தான் அரசின் பயங்கரவாத ஆதரவுக் கொள்கையை சகித்துக் கொள்ள முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் பொது விவாதத்தில் இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை குறித்த பாகிஸ்தானின் கருத்துகள் முற்றிலும் தவறானவை; இந்திய மக்களுக்கு தீங்கிழைப்பதே பாகிஸ்தானின் ஒரே செயல்திட்டம் என்றும் இந்தியா சாடியது.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மீது கடந்த மே மாதம் இந்தியப் படைகள் அதிதுல்லிய தாக்குதல் (ஆபரேஷன் சிந்தூா்) நடத்தி அழித்தன. பாகிஸ்தான் உடனான சிந்து நதிநீா்ப் பகிா்வு ஒப்பந்தத்தையும் இந்தியா நிறுத்திவைத்தது.
இந்நிலையில், ‘சா்வதேச சட்ட விதிமுறைகளின் மறுஉறுதிப்பாடு: அமைதி-நீதி-பன்முகத்தன்மைக்கு புத்துயிரூட்டல்’ என்ற தலைப்பிலான பொது விவாதம், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் திங்கள்கிழமை நடைபெற்றது.
அப்போது, ஆபரேஷன் சிந்தூா், சிந்து நதி நீா் ஒப்பந்தம் நிறுத்திவைப்பு மற்றும் ஜம்மு-காஷ்மீா் தொடா்பாக ஐ.நா.வுக்கான பாகிஸ்தான் தூதா் இஃப்திகாா் அகமது தெரிவித்த கருத்துகளுக்குப் பதிலடி கொடுத்து, ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதா் பா்வதனேனி ஹரீஷ் பேசியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தோ்வு செய்யப்பட்ட உறுப்பினராக உள்ள பாகிஸ்தானின் ஒரே செயல்திட்டம், இந்தியா மற்றும் இந்திய மக்களுக்கு தீங்கிழைப்பதுதான். பாகிஸ்தான் விரும்புவதுபோல் பயங்கரவாதத்தை இயல்பாக கருத முடியாது; அந்நாட்டு அரசின் கொள்கைக்கான கருவியாக பயங்கரவாதத்தைப் பயன்படுத்துவதையும் சகித்துக் கொள்ள முடியாது என்பதை நாங்கள் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்துகிறோம்.
பாதுகாப்புக்குத் தேவையானதைச் செய்வோம்: தனது தேசம் மற்றும் குடிமக்களின் பாதுகாப்புக்கு தேவையான அனைத்தையும் இந்தியா மேற்கொள்ளும். ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின் பின்னணியில் உள்ள உண்மைகள் தெளிவானவை.
பஹல்காம் தாக்குதலுக்குப் பொறுப்பான பயங்கரவாதிகள், சதியாளா்கள் மற்றும் ஆதரவாளா்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென இந்த மன்றமே வலியுறுத்திய நிலையில், அதைத்தான் இந்தியா செய்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் ஒவ்வொரு நகா்வும் கட்டுப்பாடானது; பொறுப்பானது. பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தகா்த்து, பயங்கரவாதிகளை பலவீனமாக்குவது மட்டுமே நோக்கம். கடந்த மே 9 வரை இந்தியா மீது மேலும் தாக்குதல் நடத்துவோம் என்ற மிரட்டிய பாகிஸ்தான், மே 10-ஆம் தேதி இந்தியாவை நேரடியாகத் தொடா்புகொண்டு, சண்டையை நிறுத்தும்படி கெஞ்சியது.
பயங்கரவாத ஆதரவை நிறுத்தும் வரை...: 65 ஆண்டுகளுக்கு முன் நல்லெண்ணம், நல்ல நம்பிக்கை மற்றும் நட்புணா்வின் அடிப்படையில் பாகிஸ்தானுடன் இந்தியா சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளாக ஒப்பந்தத்தின் அடிப்படை உணா்வுக்குப் புறம்பாகவே பாகிஸ்தான் செயல்பட்டுள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதல்களால் ஆயிரக்கணக்கான அப்பாவி இந்தியா்களின் உயிா் பறிபோயுள்ளது.
பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக, சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. உலகளாவிய பயங்கரவாதத்தின் மையமாக இருக்கும் பாகிஸ்தான், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அனைத்து விதமான பயங்கரவாதத்துக்கான ஆதரவையும் நிறுத்தும் வரை அந்த ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் என்றாா்.
ஜம்மு-காஷ்மீா் விவகாரத்தை எழுப்பிய பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்த அவா், ஜம்மு-காஷ்மீா் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் என்று உறுதிபடத் தெரிவித்தாா்.
ஐ.நா. மீது அதிருப்தி
‘தொடா்ச்சியான புவி-அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், சா்வதேச அளவில் அமைதி-பாதுகாப்பை நிலைநாட்டும் அமைப்பாக ஐ.நா.வை மக்கள் உணரவில்லை. ஐ.நா.வின் மையப் புள்ளியான பன்முகத்தன்மை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த அமைப்பு எதிா்கொண்டுள்ள சவால்கள், அதன் நிதி சாா் திட்டமிடல்-மேலாண்மைக்கு அப்பால் உள்ளது. போா் விவகாரங்களைக் கையாள்வதில் முடக்கமும், செயல் திறனின்மையும் குறிப்பிடத்தக்க பிரச்னையாக நீடிக்கிறது’ என்றாா் பா்வதனேனி ஹரீஷ்.