கடந்த 1970ஆம் ஆண்டில் அச்சிடப்பட்ட இந்திய ஒரு ரூபாய் நாணயத்தைக் கொடுத்தால் ஐஃபோன் வழங்கப்படும் என ஒரு கடைக்காரர் விடியோ வெளியிட்டிருந்தார்.
ஜனவரி மாதம் பொங்கலையொட்டி வெளியான இந்த விடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் அது உண்மைதானா என்பதை பலரும் அறிந்துகொள்ள விரும்பினர்.
ஆனால், உண்மையிலேயே அந்த விடியோவில், ஒரு கடைக்காரர், கையில் ஐஃபோனை வைத்துக் கொண்டு இந்த விளம்பரத்தை செய்கிறார். தன்னுடைய போனில், 1970ஆம் ஆண்டு அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் நாணயத்தைக் காட்டி இதனைக் கொண்டு வந்து கொடுத்துவிட்டு, எந்த தொகையும் செலுத்தாமல் ஐஃபோனை பெற்றுச் செல்லுங்கள் என்று கூறுகிறார்.
அவர் கையில் வைத்திருந்த ஐஃபோன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.80 ஆயிரமாம். ஆனால், இந்த சலுகை ஒன்றும் பொய்யல்ல என்றும், இந்த சலுகையை பெரும்பாலும் யாராலும் பெற முடியாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது 1970ஆம் ஆண்டுக்கு முன்பு நிக்கல் உலோகம் கொண்டு நாணயங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆனால், உலகப் போர் காரணமாக உலகம் முழுவதும் நிக்கல் தட்டுப்பாடு ஏற்பட்டது. நாணயங்கள் தயாரிப்பு பாதிக்கப்பட்டது. அந்த ஆண்டில் ஒரு சில நாணயங்களே தயாரிக்கப்பட்டன. அதாவது வெறும் 3 ஆயிரத்துக்கும் குறைவான நாணயங்கள்தான் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என்கின்றன தரவுகள். எனவே, அவை தற்போது மக்கள் கையில் இருப்பதே மிகவும் அரிதானது. அடுத்த ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு ரூபாய் நாணய தயாரிப்பே நிறுத்திவைக்கப்பட்டு, பிறகு மலிவான உலோகம் கொண்டு அளவில் சிறியதாக ஒரு ரூபாய் நாணயம் தயாரிப்புப் பணி மீண்டும் தொடங்கியிருக்கிறது.
தற்போது நிக்கல் உலோகம் கொண்டு தயாரிக்கப்பட்ட அந்த ஒரு ரூபாய் நாணயங்கள், நாணய சேகரிப்பாளர்களிடையே அதிகம் தேடப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்தமாகவே 32 ஆயிரம் நிக்கல் நாணயங்கள்தான் தயாரிக்கப்பட்டிருக்கின்றன. அதனால்தான், ஆன்லைன் மற்றும் நாணய சேகரிப்பாளர்கள் இதனை ஆர்வத்துடன் தேடி வருகிறார்கள். ரூ.1 லட்சம் கொடுத்தும் வாங்க தயாராக இருப்பதாகவும் இணையதளங்களில் கூறப்படுகிறது. ஒரு இணையதளத்தில் இதற்கு ரூ. ஒரு லட்சத்துக்கும் மேல் மதிப்பிடப்பட்டிருந்ததாம்.
எனவே, இந்த நாணயத்தை தேடி வருபவர்களில் இந்த கடைக்காரரும் ஒருவராக இருக்கலாம். அவருக்கு ரூ.80 ஆயிரத்தை விட, இந்த நாணயம் விலை மதிப்புடையது என்பது தெரிந்துதான் இந்த சலுகையை வெளியிட்டிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
விவரம் தெரியாமல் ஒன்றும் இந்த சலுகையை அந்தக் கடைக்காரர் வெளியிடவில்லை. வரலாறு அறிந்தவராக இருப்பதால்தான் இந்த சலுகை வெளியாகியிருக்கிறது என்றும் கூறுகிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.