நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
பரபரப்பான அரசியல் சூழலில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் இன்று (ஜன. 28 ) தொடங்கியது.
நடப்பாண்டின் முதல் கூட்டத் தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றி வருகிறார்.
இன்று தொடங்கியுள்ள பட்ஜெட் கூட்டத் தொடர், ஏப். 2-ஆம் தேதி வரை இரு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதல் கட்ட அமர்வு பிப். 13 வரையும், இரண்டாம் கட்ட அமர்வு மாா்ச் 9 முதல் ஏப். 2 வரையும் நடைபெறுகிறது.
குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்துக்கு பிப். 2 முதல் மூன்று நாள்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத் தொடர் சுமுகமாக நடைபெறுவதை உறுதி செய்யும் நோக்கில், பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், 2026-27-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப். 1-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் ஞாயிற்றுக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது மிக அரிதான நிகழ்வாகும். மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து 9-ஆவது முறையாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாளை (ஜன.29) பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றினார். அவர் ஆற்றிய உரையில்,
நாட்டில் பின்தங்கிய மக்களை முன்னேற்றுவதே அரசின் நோக்கமாகும். அருணாசல், திரிபுரா, மிசோரம் ஆகிய மூன்று மாநில தலைநகரங்களும் அகல ரயில் பாதையுடன் இணைக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய நெல் உற்பத்தியில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. கடந்தாண்டு 350 மில்லியன் டன் உணவுப் பொருள் உற்பத்தி செய்யப்பட்டது. உலகளவில் பொருளாதார சிக்கல் இருந்தாலும் இந்தியாவின் பொருளாதாரம் வலுவாக உள்ளது. இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்கிறது.
கடந்த 10 ஆண்டுகளில் ஏழை மக்களுக்கு 4 கோடு வீடுகள் கட்டப்பட்டுள்ளன. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 2 கோடி மக்களுக்கு காஸ் இணைப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.
பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களின் வளர்ச்சிக்குப் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தால் மக்களின் வீடுகளுக்கு அருகே மருத்துவ வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
உலகில் மூன்றாவது பெரிய மெட்ரோ நெட்வோர்க் கொண்ட நாடு இந்தியா. 2025-ல் இரண்டு கோடிக்கு மேல் இருசக்கர வாகனப் பதிவு நடந்துள்ளது.
வி.பி.ஜி. ராம் ஜி சட்டத்தைக் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் எதிர்ப்புக்கிடையே திரௌபதி முர்மு உரையாற்றினார்.
மீனவர்கள் நலனுக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மகளிருக்காக பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் எய்ம்ஸ் உள்ளிட்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
லாக்பதி தீதி என அழைக்கப்படும் லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுகிறது. அரிய தாதுப் பொருள்களின் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.
ஆபரேஷன் சிந்தூருக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்தியப் படைகளின் வீரத்தை ஆபரேஷன் சிந்தூர் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது.
நக்சலைட்கள், மாவோயிஸ்ட்டுகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 100-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் நக்சலைட் தீவிரவாதம் ஒழிக்கப்பட்டதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
ராமேஸ்வரத்தில் பாம்பன் புதிய ரயில் பாலம் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அசாமில் செமி கண்டக்கடர் ஆலை பணிகள் தீவிரமாக நடக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.