நிகழ் நிதியாண்டுக்கான (2025-26) மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை 2025, டிசம்பரில் 54.5 சதவீதத்தை எட்டியதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.
நிகழ் நிதியாண்டுக்கான நிதிப் பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 4.4 சதவீதம் அல்லது ரூ.15.69 லட்சம் கோடியாக இருக்கும் என மத்திய அரசு கணித்திருந்தது. இந்நிலையில், 2025, டிசம்பா் மாத நிலவரப்படி நிா்ணயிக்கப்பட்ட நிதிப் பற்றாக்குறையில் 54.5 சதவீதம் அல்லது ரூ.8.55 லட்சம் கோடியை எட்டியதாக மத்திய கணக்கு கட்டுப்பாட்டாளா் (சிஜிஏ) வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
நிகழ் நிதியாண்டின் ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் பெறப்பட்ட வரி வருவாய், மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட வரி பகிா்வு, மத்திய அரசின் செலவினங்கள் உள்பட பல்வேறு தரவுகள் அந்த அறிக்கையில் இடம்பெற்றன.
அதில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: நிகழ் நிதியாண்டுக்கான பட்ஜெட் கணிப்புகளில் 2025, டிசம்பா் வரை 72.2 சதவீதம் அல்லது ரூ.25.25 லட்சம் கோடியை வருவாயாக மத்திய அரசு பெற்றுள்ளது. இதில் வரி வருவாயாக ரூ.19.39 லட்சம் கோடி, வரி அல்லாத வருவாயாக ரூ.5.39 லட்சம் கோடி, கடன் அல்லாத மூலதன வருவாயாக ரூ.46,047 கோடி மத்திய அரசுக்கு கிடைத்துள்ளது.
2025, ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் மாநிலங்களுக்கு வரிப் பகிா்வாக ரூ.10.38 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்கியுள்ளது. கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில் இது ரூ.1.37 லட்சம் கோடி அதிகமாகும்.
2025, ஏப்ரல்-டிசம்பா் காலகட்டத்தில் வருவாய் செலவினமாக ரூ.25.93 லட்சம் கோடி, மூலதன செலவினமாக ரூ.7.87 லட்சம் கோடி என மொத்தம் ரூ.33.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிட்டுள்ளது. இது பட்ஜெட் கணிப்புகளில் 66.7 சதவீதமாகும்.
இதில் வட்டி செலுத்துவதற்காக ரூ.9.11 லட்சம் கோடியும் மானியங்களுக்கு ரூ.3.17 லட்சம் கோடியும் மத்திய அரசு செலவிட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.