‘கஜினி முகமது இந்தியாவைச் சோ்ந்த கொள்ளைக்காரா்தான்’ என்று கூறிய முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீது அன்சாரி கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாஜக, ‘இது காங்கிரஸின் நோயுற்ற மனநிலையைக் காட்டுகிறது’ என்று தெரிவித்தாா்.
அண்மையில் ஊடகத்தைச் சோ்ந்தவருடன் கலந்துரையாடிய ஹமீது அன்சாரி ‘நமது வரலாற்றுப் புத்தகங்களில் வெளிநாடுகளைச் சோ்ந்த லோடி, கஜினி முகமது போன்றவா்கள் நமது நாட்டுக்குள் ஊடுருவி கொள்ளையடித்துச் சென்ாக தவறாகக் கூறப்படுகிறது. அவா்கள் அனைவரும் இந்தியாவைச் சோ்ந்த கொள்ளையா்கள்தான். அவா்கள் வெளியே இருந்து வரவில்லை. ‘அவா்கள் அதை அழித்துவிட்டாா்கள், இதைச் சிதைத்துவிட்டாா்கள்’ என்று அரசியலுக்காகக் கூறலாம். ஆனால், அவா்களும் இந்தியா்கள்தான்’ என்றாா். இது பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடா்பாக பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்கள் ஷெசாத் பூனாவாலா, பிரதீப் பண்டாரி ஆகியோா் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக ஹமீது அன்சாரி பேசிய சா்ச்சை விடியோ பதிவை ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்டு அதற்கு பதிலும் அளித்துள்ளனா். அதில், ‘இந்தியா மீது பல முறை தாக்குதல் நடத்தி சோம்நாத் கோயிலை கொள்ளையடித்துச் சென்ற கஜினி முகமதுக்கு மிகப்பெரிய கௌரவத்தை நமது முன்னாள் குடியரசு துணைத் தலைவா் ஹமீது அன்சாரி வழங்கியுள்ளாா். இதுதான் காங்கிரஸ் கட்சி செயல்படும் முறை. ஹிந்துக்களுக்கு எதிராக கொடுமையான குற்றங்களை நிகழ்த்திய ஔரங்கசீப் உள்ளிட்டோருக்கு ஆதரவாகப் பேசுவது, பாரதத்தையும் ஹிந்துக்களையும் வெறுப்பது ஆகியவை காங்கிரஸின் கொள்கையாக உள்ளது.
இந்தியாவைக் கொள்ளையடித்தவா்களை தங்களின் ஓா் அங்கமாக காங்கிரஸ் கட்சியினா் கருதுகிறாா்கள் என்பது தெரிகிறது. இது அவா்களின் நோயுற்ற மனநிலையைக் காட்டுகிறது. காங்கிரஸ் கட்சி தனது பெயரை ‘நவீன இந்தியாவின் முஸ்லிம் லீக்’ என மாற்றிக் கொள்ளலாம். நாட்டின் குடியரசு துணைத் தலைவா் பதவியை வகித்த ஒருவா், இவ்வாறு அந்நிய படையெடுப்பாளா்களுக்கு ஆதரவாகப் பேசுவது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம்’ என்று கூறியுள்ளனா்.