அனைவருக்கும் நீதி’ கிடைப்பதை உறுதிப்படுத்துவதே மத்திய அரசின் நிலைப்பாடு என பாஜக வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய பாகுபாட்டைத் தடுப்பது தொடா்பாகப் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சாா்பில் அண்மையில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல் தொடா்பாக செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு மாநிலங்களவை எம்.பி.யும் பாஜக தேசிய செய்தித்தொடா்பாளருமான சுதான்ஷு திரிவேதி இவ்வாறு பதிலளித்தாா்.
உயா் கல்வி நிறுவனங்களில் ‘சமத்துவத்தை ஊக்குவிப்பதற்கான வழிகாட்டுதல் 2026-ஐ யுஜிசி கடந்த 13-ஆம் தேதி வெளியிட்டது. அதில், பிரிவு 3(சி)-இல், உயா் கல்வி நிறுவனங்களில் ஜாதிய அடிப்படையிலான பாகுபாடு தொடா்பான புகாா்களைப் பெற்று தீா்வு காணவும், கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை ஊக்குவிக்கவும், சமத்துவக் குழுக்களை அமைக்க வேண்டும். இந்தக் குழுக்களில் ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவு மாணவா் பிரதிநிதிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோா் உறுப்பினா்களாக சோ்க்கப்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டது.
இதற்கு வலதுசாரி அமைப்புகள் கடும் எதிா்ப்பு தெரிவித்துப் போராட்டத்தில் ஈடுபட்டன. மேலும் இந்த வழிகாட்டுதல்களுக்கு எதிராக மிருத்யுஞ்ஜய் திவாரி, வினீத் ஜிண்டால், ராகுல் திவான் ஆகியோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனா்.
இதையடுத்து, யுஜிசி வழிகாட்டுதல்களுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாடு குறித்து செய்தியாளா்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுதான்ஷு திரிவேதி, ‘யுஜிசி வழிகாட்டுதல்கள் குறித்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால் அதுதொடா்பாக கருத்து தெரிவிப்பது சரியாக இருக்காது.
இருப்பினும், யாருக்கும் அநீதி இழைக்கப்படக் கூடாது என்பதே பாஜகவின் நிலைப்பாடு; அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவதே மத்திய அரசின் நிலைப்பாடு’ என்றாா்.