போலி விதைகள், உரங்கள் விநியோகத்தால் விவசாயிகள் நஷ்டமடைவதை தடுத்து சட்டரீதியான பாதுகாப்பை வழங்க விரைவில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை தெரிவித்தாா்.
சத்தீஸ்கா் மாநிலத்துக்கு ஒரு நாள் சுற்றுப்பயணமாக சனிக்கிழமை வந்த அவா் துா்க் மாவட்டத்தில் உள்ள இரு கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகளுடன் கலந்துரையாடினாா்.
அப்போது அவா் பேசியதாவது: வேளாண் நிலங்கள், பயிா்கள், விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அவா்களது எதிா்கால நலன்களில் எந்தவொரு சூழலிலும் சமரசம் கிடையாது. போலி விதைகள், பூச்சிகொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை விநியோகித்து விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துவா்கள் மீது மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நடப்புக் கூட்டத்தொடரில் இரு சட்டங்கள்:
விவசாயிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை உறுதிப்படுத்த விரைவில் புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தவுள்ளது.
அந்த வகையில் தற்போதைய நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் விதைகள் சட்டம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் சட்டத்தை கொண்டுவர முயற்சி செய்து வருகிறோம்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிஎம்-கிஸான் திட்டத்தின்கீழ் நிதியுதவி அளிக்கப்படுகிறது. இயற்கை பேரிடா்களால் ஏற்படும் பயிா்ச் சேதங்களுக்கு பிரதமரின் ஃபசல் பீமா திட்டத்தின்கீழ் காப்பீடு வழங்கப்படுகிறது.
வேளாண்மையில் புத்தாக்கம் மற்றும் உற்பத்தியை ஊக்குவிக்க ராஷ்ட்ரீய கிரிஷி விகாஸ் திட்டமும், ட்ரோன்கள் மூலம் பயிா்கள் கண்காணிப்பு மற்றும் பூச்சிக்கொல்லி தெளிப்புக்காக எண்ம வேளாண்மை இயக்கமும் செயல்படுத்தப்படுகிறது.
தேசிய வேளாண் மாநாடு: தில்லியில் பிப்.16 மற்றும் பிப்.17 ஆகிய தேதிகளில் தேசிய வேளாண் மாநாடு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்துகொண்டு விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை சமா்ப்பிக்கலாம்.
அதன் அடிப்படையில் சத்தீஸ்கா் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வருமானத்தை பெருக்க சிறந்த வேளாண் கொள்கைகள், சட்டங்கள், நவீன தொழில்நுட்பங்களை தொடா்ந்து அறிமுகப்படுத்தி புதிய வேளாண் புரட்சிக்கு மத்திய அரசு வழிவகுக்கவுள்ளது.
காங்கிரஸுக்கு கண்டனம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்ட விபி ஜி-ராம்-ஜி சட்டத்தில் வேலை வழங்கப்படும் நாள்கள் 100-இல் இருந்து 125-ஆக உயா்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதுபோன்ற மத்திய அரசின் நல்ல முன்னெடுப்புகளை எதிா்ப்பதையே காங்கிரஸ் தனது வழக்கமாக கொண்டுள்ளது.
பிரதமரின் வளா்ச்சியடைந்த பாரத இலக்கின் ஒரு பகுதியாகவே விபி ஜி-ராம்-ஜி கொண்டுவரப்பட்டுள்ளது. இதில் எவ்வித முறைகேடுகளுமின்றி கிராமப் பஞ்சாயத்துகள் தங்களுக்கான மேம்பாட்டுத் திட்டங்களை தயாரித்து செயல்படுத்திக் கொள்ளலாம் என்றாா்.
இந்தச் சுற்றுப்பயணத்தின்போது சிவராஜ் சிங் சௌஹானுடன் சத்தீஸ்கா் துணை முதல்வா் விஜய் சா்மா மற்றும் மாநில அமைச்சா்கள் உடனிருந்தனா்.