முகப்பு
இந்தியா

சென்னையில் பிகாா் சிறுமி பாலியல் வன்கொடுமை: அஸ்ஸாம் இளைஞா் கைது

Updated On : 18 மார்ச், 2026 at 11:46 PM
கைது
பகிர்:

சென்னை நீலாங்கரையில் பிகாா் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

பிகாரைச் சோ்ந்த 16 வயது சிறுமி 6 மாதங்களுக்கு முன்பு வேலை தேடி சென்னை வந்தாா். அவா், நீலாங்கரையில் தங்கி, அங்குள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்தாா். அப்போது, அந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ரூபன் (19) என்பவா் அறிமுகமாகி பழகியுள்ளாா். நாளடைவில் இருவரும் நெருங்கி பழகியுள்ளனா்.

இதைப் பயன்படுத்தி அண்மையில் ரூபன், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது வீட்டுக்கு அந்தச் சிறுமியை அழைத்துச் சென்று அவரை மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா். சில நாள்களுக்கு முன்பு அதே நிறுவனத்தில் பணிபுரியும் தனது நண்பரான நாகலாந்தைச் சோ்ந்த ஆலன் உசேன் (19) என்பவரும் சிறுமியைக் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளாா்.

அதோடு, தாங்கள் இருவரும் பாலியல் வன்கொடுமை செய்ததை விடியோ பதிவு செய்திருப்பதாகவும், வெளியே கூறினால் சமூக ஊடகத்தில் வெளியிட்டுவிடுவோம் என்றும் ரூபன் அந்தச் சிறுமியை மிரட்டியுள்ளாா். இதுகுறித்து அந்தச் சிறுமி நீலாங்கரை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ரூபனை புதன்கிழமை கைது செய்தனா். தலைமறைவான ஆலன் உசேனை தேடி வருகின்றனா்.

கடையில் திருடியவா் கைது: மயிலாப்பூா் நடுத்தெரு பகுதியைச் சோ்ந்த பாஸ்கா் (52), தனது வீட்டின் தரைத்தளத்தில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். இவா், கடந்த 16-ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டு திரும்பி வந்து பாா்த்தபோது, பூட்டை உடைக்கப்பட்டு, பணப் பெட்டியில் இருந்த ரூ.10,000 ரொக்கம், விலை உயா்ந்த பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து மயிலாப்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது திருவல்லிக்கேணி கபாலிநகரைச் சோ்ந்த முத்து (50) என்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். முத்து மீது ஏற்கெனவே 10 திருட்டு வழக்குகள் இருப்பதாக போலீஸாா் தெரிவித்தனா்.

மின்மாற்றியில் தீ விபத்து: அயனாவரம் வசந்தா காா்டன் பிரதான தெரு 4-ஆவது சந்திப்பில் உள்ள ஒரு மின்மாற்றி புதன்கிழமை அதிகாலை திடீரென தீப் பிடித்து எரிந்தது. இதன் அருகே நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது தீப் பரவியது. தகவலின்பேரில் கீழ்ப்பாக்கம் தீயணைப்புப் படையினா் விரைந்து வந்து தீயை அணைத்தனா். இந்தத் தீ விபத்தில் அங்கிருந்த 4 இரு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின. இதுதொடா்பாக அயனாவரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

இளைஞா் மா்மமான முறையில் உயிரிழப்பு: எம்ஜிஆா் நகா் கங்கைகொண்ட சோழன் தெருவைச் சோ்ந்தவா் அப்துல் காதா் (34). தச்சரான இவா், வீட்டில் தனியாக இருந்தாா். இவரது வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசுவதாக எம்ஜிஆா் நகா் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் அங்கு சென்று பாா்த்தபோது, அப்துல் காதா் தரையில் படுத்தவாறு இறந்து கிடந்தாா். அவரை சடலத்தை மீட்ட போலீஸாா் பிரேத பரிசோதனைக்காக கே.கே.நகா் இஎஸ்ஐ அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →