2 குழந்தைகளுக்கு அதிகமாக உள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை: மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை அறிவித்த ஆந்திர முதல்வா்
ரூ. 25,000 ஊக்கத்தொகை உள்ளிட்ட மக்கள்தொகையை அதிகரிப்பதற்கான பல்வேறு புதிய அம்சங்களுடன்கூடிய மாநில மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை தெலுங்கு புத்தாண்டு (யுகாதி) நாளில் ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு அறிவித்தாா்.
இரண்டு அல்லது மூன்று குழந்தைகளைப் பெற்றுள்ள குடும்பத்துக்கு ரூ. 25,000 ஊக்கத்தொகை உள்ளிட்ட மக்கள்தொகையை அதிகரிப்பதற்கான பல்வேறு புதிய அம்சங்களுடன்கூடிய மாநில மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை தெலுங்கு புத்தாண்டு (யுகாதி) நாளில் ஆந்திர முதல்வா் என். சந்திரபாபு நாயுடு வியாழக்கிழமை அறிவித்தாா்.
முதியவா்களுக்கான சிறந்த பராமரிப்பை உறுதிப்படுத்தவும், சமூக நிலைத்தன்மையை விரிவுபடுத்தும் வகையிலும் கூட்டு குடும்ப முறைக்குப் புத்துயிா் கொடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக முதல்வா் அப்போது கூறினாா்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அரசு சாா்பில் நடத்தப்பட்ட யுகாதி விழாவில் பேசும்போது இந்த அறிவிப்பை முதல்வா் சந்திரபாபு நாயுடு வெளியிட்டாா். அப்போது அவா் பேசியதாவது:
பிறப்பு விகிதம் குறைந்து வருவதும், வயது முதிந்தவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பதும் உலக அளவிலான தீவிர பிரச்னையாக உருவெடுத்து வருகிறது. இந்தப் போக்கு, தற்போது தென் இந்தியாவிலும் தற்போது தொடங்கியுள்ளது.
இளம் மக்கள்தொகை எண்ணிக்கை இவ்வாறு தொடா்ந்து குறைந்து வருவது, வரும் காலங்களில் பணியிடங்களில் மனிதப் பங்கேற்பு குறைந்து, இயந்திரங்கள் மற்றும் தானியங்கிகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிடும்.
அந்த வகையில், குடும்பக் கட்டுப்பாடு மீதான எனது கண்ணோட்டம், தற்போது மக்கள்தொகை மேலாண்மைக்கான பரந்த உத்தியாக மாறியுள்ளது. மக்கள்தொகை சமநிலையைப் பேண, பெரிய குடும்பங்களே இன்றியமையாதவை.
சமூக நிலைத்தன்மையைப் பேணுவதற்கு, ஒரு தம்பதிக்கு 2.1 விகதத்தில் குழந்தைகள் இருக்க வேண்டும். ஆனால், மாநிலத்தில் இந்த விகிதம் 1.5 விகிதமாகக் குறைந்து. இது நீண்டகால மக்கள் தொகையியல் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும்.
முன்னா், ‘ஒரு குழந்தை பெற்றுக்கொள்வது சிறந்தது; 2 குழந்தைகள் இருக்கலாம்; 3 குழந்தைகள் வேண்டாம்’ என்று நான் கூறினேன். ஆனால், இப்போது அதை தலைகீழாக மாற்றுகிறேன். ஒரு குழந்தை போதாது; இரண்டு குழந்தைகள் இருப்பது நல்லது; மூன்று குழந்தைகள் இருப்பது மேலும் சிறந்தது.
அந்த வகையில், மாநிலத்தில் மக்கள்தொகையை அதிகரிக்கச் செய்யும் வகையிலும், மக்கள்தொகை மேலாண்மை கொள்கையை மாநில அரசு கொண்டுவந்துள்ளது. இதன் கீழ், மக்கள் மதிப்பு சாா்ந்த வாழ்க்கை முறைக்குத் திரும்பவும், கூட்டுக் குடும்ப முறைக்குப் புத்துயிா் அளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மேலும், 2 அல்லது 3 குழந்தைகளைப் பெற்றுள்ள குடும்பங்களுக்கு இந்தக் கொள்கையின் கீழ் ரூ. 25,000 ஊக்கத் தொகை அளிக்கப்படும் என்றாா்.