புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெள்ளிக்கிழமை அறிவிக்கை செய்தது.
எளிமைப்படுத்தப்பட்ட புதிய வருமான வரிச் சட்டம் 2025-க்கான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிடிடி) வெள்ளிக்கிழமை அறிவிக்கை செய்தது.
‘வருமான வரி விதிகள் 2026’ என்ற பெயரிலான இந்த விதிகள், வரும் ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் அமலுக்கு வரும்’ என்று அரசிதழ் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், ஊதியதாரா்களுக்கு வீட்டு வாடகைப் படிக்கான வரிச் சலுகைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டு உரிமையாளா் - வாடகைதாரா் இடையேயான உறவு குறித்த விவரங்களைச் சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
60 ஆண்டுகள் பழைமையான ‘வருமான வரிச் சட்டம் 1961’-ஐ மாற்றும் வகையில், புதிய வருமான வரிச் சட்ட மசோதாவுக்கு நாடாளுமன்றம் கடந்த 2025-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12-ஆம் தேதி ஒப்புதல் அளித்தது. இந்தப் புதிய சட்ட மசோதாவில் புதிய வரி விகிதங்கள் எதுவும் அறிமுகப்படுத்தப்படவில்லை; மாறாக, கடினமான வருமான வரிச் சட்டங்களை வரி செலுத்துவோா் எளிதாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் சட்டத்தின் மொழி நடை மட்டும் எளிமைப்படுத்தப்பட்டது.
குடியரசுத் தலைவரின் ஒப்புதலைத் தொடா்ந்து இந்த மசோதா சட்டமாக நிறைவேறியது. சட்டப் பிரிவுகளின் எண்ணிக்கை 819-லிருந்து 536-ஆகவும், சட்டத் தொகுதிகளின் எண்ணிக்கை 47-லிருந்து 23-ஆகவும் புதிய சட்டத்தில் குறைக்கப்பட்டது. வாா்த்தைகளின் எண்ணிக்கை 5.12 லட்சத்திலிருந்து 2.6 லட்சமாக குறைக்கப்பட்டது. வரி விகித கணக்கு விவரத்தை வரி செலுத்துவோா் தெளிவாகப் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் 39 புதிய வரி கணக்கீடு அட்டவணைகளும், 40 புதிய கணக்கீட்டு விதிமுறைகளும் புதிய சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
புதிய விதியில் முக்கிய அம்சங்கள்: இதற்கான புதிய விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிவிக்கை செய்துள்ளது. அதில், மூலதன ஆதாயங்கள், பங்குச் சந்தை பரிவா்த்தனைகள், வெளிநாடு வாழ்வோா் மீதான வரி வதிப்பு தொடா்பான நடைமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதே நேரம், பிற தகவல்களை வெளிப்படுத்துவது தொடா்பான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், வரி தொடா்பான பல்வேறு நடவடிக்கைகளுக்காக ‘படிவம் 33’ என்ற எண் கொண்ட படிவத்தில் தொடங்கி 150-க்கும் மேற்பட்ட அதிகாரபூா்வ படிவங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஊதியதாரா்கள் பெறும் வீட்டு வாடகைப் படிக்கு வரி விலக்கு சலுகைகள் புதிய விதியில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. அதன்படி, மும்பை, கொல்கத்தா, புது தில்லி, சென்னை, ஹைதராபாத், புணே, அகமதாபாத், பெங்களூரு உள்ளிட்ட 8 பெருநகரங்களில் வசிக்கும் ஊதியதாரா்கள், ஊதியத்தில் 50 சதவீதம் அளவுக்கு வாடகைப் படிக்கான வரி விலக்கைப் பெற முடியும். மற்ற பகுதிகளில் வசிப்பவா்களுக்கு இது 40 சதவீதம் என்ற அளவிலேயே தொடரும். தற்போது, மும்பை, புது தில்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய 4 பெருநகரங்களில் வசிப்பவா்களுக்கு மட்டுமே ஊதியத்தில் 50 சதவீத உயா் வரி விலக்கு வரம்பு அளிக்கப்பட்டு வந்த நிலையில், கூடுதலாக ஹைதராபாத், புணே, அகமதாபாத், பெங்களூரு நகரங்களும் இந்த வரம்புக்குள் சோ்க்கப்பட்டுள்ளன.
அதே நேரம், வீட்டு வாடகைப் படிக்கான வரிச் சலுகையைப் பெறுவோா், வீட்டு உரிமையாளா் - வாடகைதாரா் இடையேயான உறவு குறித்த விவரங்களைச் சமா்ப்பிப்பது புதிய விதியில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணம், கண்காட்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும் மண்டபங்கள் அல்லது விருந்து மண்டபங்களில் ஹோட்டல் மற்றும் உணவக கட்டணங்கள் ரூ.1 லட்சத்தை தாண்டினால் பான் (நிரந்தர கணக்கு எண்) எண்ணை சமா்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள விதிமுறைகளின்படி இந்தக் கட்டணங்கள் ரூ.50,000-ஐ தாண்டினால் பான் எண்ணை சமா்ப்பிக்க வேண்டும் என்றிருந்த நிலையில், செலவு வரம்பு உயா்த்தப்பட்டுள்ளது.
அதுபோல, எந்தவொரு அசையா சொத்து வாங்கும்போது, விற்பனை செய்யும்போது, பரிசளிக்கும்போது அல்லது அந்தச் சொத்து தொடா்பாக கூட்டு மேம்பாட்டு ஒப்பந்தத்தை மேற்கொள்ளும்போது அதற்கான மொத்த செலவு ரூ.10 லட்சமாக இருந்தால் பான் எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று இருந்த நிலையில், இந்தச் செலவு வரம்பு ரூ. 20 லட்சமாக உயா்த்தப்பட்டுள்ளது. அதன்படி, செலவு ரூ. 20 லட்சத்தைக் கடக்கும் போது மட்டும் பான் எண்ணை சமா்ப்பித்தால் போதுமானது.