ஐந்து மாநில பேரவைத் தேர்தல்கள் தயார் நிலை: உயரதிகாரிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை
நமது நிருபர்
சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் அவற்றின் 12 அண்டை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின தலைமைச் செயலர்கள், தலைமைத் தேர்தல் அதிகாரிகள், காவல் துறை தலைமை இயக்குநர்கள், காவல் துறை தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளுடன் இந்திய தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை மீளாய்வுக் கூட்டம் நடத்தியது.
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், அஸ்ஸôம், மேற்கு வங்கம் சட்டப் பேரவைகளுக்கான தேர்தல்கள் மற்றும் 6 மாநிலங்களில் இடைத்தேர்தல்களுக்கான தேதியை மார்ச் 15}ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி, ஏப். 9}ஆம் தேதி கேரளம், புதுச்சேரி, அஸ்ஸôம் மாநிலங்களிலும், ஏப்.23}ஆம் தேதி தமிழகத்திலும் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்துக்கு இரு கட்டங்களாக ஏப்.23, 29 தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்நிலையில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் தயார்நிலை, சட்டம்}ஒழுங்கு நிலைமை, சட்டவிரோதப் பணம், மதுபானம், போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் பறிமுதல் நடவடிக்கைகள், மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகள் மற்றும் தேர்தல் செலவினம் உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையர்கள் எஸ்.எஸ். சாந்து, விவேக் ஜோஷி ஆகியோருடன் இணைந்து ஆய்வு செய்தார்.
இது குறித்து ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களின் அதிகாரிகள் தங்கள் ஒட்டுமொத்தத் தேர்தல் ஏற்பாடுகள், சட்டம்}ஒழுங்கு சார்ந்த சிக்கல்கள், தேர்தல் செலவின அமலாக்க நடவடிக்கைகள் மற்றும் மத்திய முகமைகள் அல்லது அண்டை மாநிலங்கள் தொடர்பான பிரச்னைகள் அல்லது நிலுவையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆணையத்திடம் விவரித்தனர்.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசத்தில் அமைதி மற்றும் சட்டம்}ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக, எல்லை மாவட்டங்களில் எல்லைகளை மூடி பாதுகாப்பில் சிறப்புக் கவனம் செலுத்துவது குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.
வன்முறையற்ற தேர்தல்களை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மேற்கொள்ளுமாறு அண்டை மாநிலங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
மேலும், தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களிலும், அந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் எல்லைப் பகுதிகளிலும் தீவிரக் கண்காணிப்பை உறுதி செய்யவும் மாநிலங்களுக்கு இடையிலான சோதனைச் சாவடிகளில் சோதனைகளைத் தீவிரப்படுத்தவும் இக்கூட்டத்தின்போது உத்தரவிடப்பட்டது.
தேசிய போதைப் பொருள் தடுப்புத் துறை (என்சிபி), வருமான வரித் துறை, மத்திய சரக்கு மற்றும் சேவை வரித் துறை (சிஜிஎஸ்டி) மற்றும் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் உள்ளிட்ட மத்திய முகமைகள், தேர்தல் நெருங்கும் காலகட்டத்தில் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறும் நம்பகமான உளவுத் தகவல்களின் அடிப்படையில் சட்டவிரோதப் பணம், மதுபானங்கள், போதைப் பொருள், ஆயுதங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்வதை தீவிரப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.