முகப்பு
இந்தியா

கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!

கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானமாக அளிக்கப்பட்டன.

Updated On : 25 மார்ச், 2026 at 4:37 AM
மருத்துவமனையில் ஹரீஷ் ராணா - கோப்புப்படம் - x video
பகிர்:

நாட்டிலேயே முதல் முறையாக, உச்ச நீதிமன்ற அனுமதியோடு கருணைக் கொலை செய்யப்பட்ட இளைஞர் ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் மற்றும் இதய வால்வுகளை அவரது குடும்பத்தினர் தானமாக அளித்துள்ளனர்.

கடந்த 13 ஆண்டுகளாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த 31 வயது ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருந்த நிலையில், தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அவரது உயிர் பிரிந்தது.

13 ஆண்டுகள் கோமாவில் இருந்தாலும், அவர் கரணைக் கொலை செய்யப்பட்ட பிறகு, அவரது உடலில் பயன்படுத்த உகந்ததாக இருந்த கருவிழிகளும், இதய வால்வுகளையும் அவரது குடும்பத்தினர் தானமாக அளிக்க முன் வந்தனர். நாடு முழுவதும் மனித உடல் உறுப்புகளின் தானம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்தவே, அவற்றை அவரது குடும்பத்தினர் தானமாக அளித்திருக்கிறார்கள்.

தங்களது மகன் இறப்பினால் ஏற்பட்ட துக்கத்திலும், மற்றவர்களுக்கு பயன்படுமே என்று கருவிழிகளை தானமாக அளிக்க பெற்றோர் முன் வந்தனர். உடல் உறுப்புகளுக்காகக் காத்திருக்கும் ஏராளமானோரில் ஒரு சிலருக்காவது மகனின் கருவிழிகள் பயன்படுமே என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

நாடு முழுவதும் ராணாவின் இறப்பு குறித்து இரங்கல்கள் குவிந்துவரும் நிலையில், தங்களது துக்கத்திலும், அவர்களது பெற்றோர் செய்த தானம், பாராட்டுதல்களையும் பெற்று வருகிறது.

கடந்த 2013-ஆம் ஆண்டில் உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாதைச் சோ்ந்த கல்லூரி மாணவராக இருந்த ஹரீஷ் ராணா, 4-ஆவது மாடியில் விளையாடிக் கொண்டிருந்தபோது கீழே தவறி விழுந்தாா். இதில் தலையில் படுகாயம் ஏற்பட்டு தொடா்ந்து 13 ஆண்டுகளாக கோமாவில், உயிா் காக்கும் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தாா்.

இதைத் தொடா்ந்து, ஹரீஷை கருணைக் கொலை செய்ய அனுமதிக்கக் கோரி, உச்சநீதிமன்றத்தில் அவரின் பெற்றோா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நாட்டிலேயே முதல் முறையாக, ஹரீஷ் ராணாவுக்கு அளிக்கும் உயிா் காக்கும் சிகிச்சையை நிறுத்தி, கண்ணியமான முறையில் அவரைக் கருணைக் கொலை செய்ய கடந்த மாா்ச் 11-ஆம் தேதி அனுமதியளித்தனர்.

அதைத் தொடா்ந்து, உயிா் காக்கும் கருவி உதவியுடன் வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த ஹரீஷ் ராணா, தில்லி எய்ம்ஸ் வளாகத்தில் உள்ள டாக்டா் பி.ஆா்.அம்பேத்கா் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனையின் துணைப் பராமரிப்புப் பிரிவுக்கு மாா்ச் 14-ஆம் தேதி மற்றப்பட்டாா். அங்கு அவருக்கு, ஊட்டச்சத்து மற்றும் மருந்துகள் அளிப்பது படிப்படியாக நிறுத்தப்பட்டு இறுதியாக உயிா் காக்கும் கருவியும் அகற்றப்பட்ட நிலையில் அவரின் உயிா் செவ்வாய்க்கிழமை பிரிந்ததாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.