மேற்கு வங்கத்தில் எந்தத் தொகுதியில் ராஜிநாமா? “பாஜக தலைமை தீர்மானிக்கும்” - சுவேந்து அதிகாரி
மேற்கு வங்கத்தில் இரு தொகுதிகளில் வெற்றி: 10 நாள்களில் ராஜிநாமா: சுவேந்து அதிகாரி
கொல்கத்தா : மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள அம்மாநில பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி, இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் அடுத்த 10 நாள்களில் வெற்றியை ராஜிநாமா செய்யவுள்ளதாக புதன்கிழமை(மே 6) தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்ற 293 தொகுதிகளிலும் கடந்த திங்கள்கிழமை வாக்கு எண்ணிக்கை முடிந்து முடிவுகள் வெளியான நிலையில், பாஜக 207 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அங்கு தொடர்ச்சியாக ஆளுங்கட்சியாக இருந்த திரிணமூல் காங்கிரஸ் 80 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இதையடுத்து மேற்கு வங்கத்தில் புதிதாக வரும் மே 9-ஆம் தேதி பாஜக அரசு பதவியேற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
இதனிடையே, சட்டப்பேரவைத் தேர்தலில் பவானிபூரிலும் நந்திகிராமிலும் பாஜக சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய சுவேந்து அதிகாரி இரு தொகுதிகளில் வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் எந்தத் தொகுதியில் ராஜிநாமா செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இது குறித்து, புதன்கிழமை(மே 6) சுவேந்து அதிகாரி பேசியதாவது : “இரு தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் இன்னும் 10 நாள்களில் ராஜிநாமா செய்வேன். எந்தத் தொகுதியைத் தக்க வைக்க வேண்டும் என்பதை கட்சி தீர்மானிக்கும். பவானிபூர் மற்றும் நந்திகிராம் மக்களுக்கான எமது பொறுப்புணர்வை நான் மறக்க மாட்டேன்” என்றார்.