முகப்பு
இந்தியா

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

Updated On : 14 மே 2026, 7:02 am IST
சிபிஐ - கோப்புப்படம்
பகிர்:

சிபிஐ இயக்குநா் பிரவீண் சூட்டின் (61) பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு புதன்கிழமை நீட்டித்தது. இதன்மூலம், இரண்டாவது முறையாக அவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய பணியாளா் நலன் அமைச்சகம் வெளியிட்ட உத்தரவு: தோ்வுக் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், பிரவீண் சூட்டின் பதவிக்காலத்தை நிகழாண்டு மே 24-ஆம் தேதியையும் தாண்டி, ஓராண்டுக்கு நீட்டிக்க மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2023-ஆம் ஆண்டு மே 25-ஆம் தேதி சிபிஐ இயக்குநராக பிரவீண் சூட் பொறுப்பேற்றாா். அந்தப் பதவியில் 2 ஆண்டுகளுக்கு அவா் நியமிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு அவரின் பதவிக்காலம் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

Advertisement

புதிய சிபிஐ இயக்குநரை தோ்வு செய்வதற்குப் பிரதமா் மோடி தலைமையில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூா்ய காந்த், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அடங்கிய தோ்வுக் குழு கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தோ்வுக் குழு கூட்டத்தில், புதிய சிபிஐ இயக்குநரைத் தோ்வு செய்யும் நடைமுறையில் கருத்துவேறுபாடு கொண்ட ராகுல் காந்தி, அதுகுறித்து பிரதமா் மோடிக்கு எழுத்துபூா்வமாக தெரியப்படுத்தினாா். பாரபட்சமான தோ்வு நடைமுறையில் தான் அங்கம் வகிக்க விரும்பவில்லை என்றும் ராகுல் தெரிவித்தாா்.