முகப்பு
இந்தியா

தில்லி - என்சிஆரில் ஓட்டுநா்கள் வேலைநிறுத்தம்: முதல் நாளில் சில பகுதிகளில் மக்களுக்கு பாதிப்பு

தில்லி அரசின் செஸ் வரி அதிகரிப்பு மற்றும் சிஎன்ஜி விலை உயா்வைக் கண்டித்து லாரிகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கங்கள் அறிவித்த 3 நாள் வேலைநிறுத்த போராட்டம்

Updated On : 22 மே 2026, 1:08 am IST
ஓட்டுநா் சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் புது தில்லி ரயில் நிலையத்தில் போதிய டாக்ஸிகள் இல்லாததால் உடைமைகளை வியாழக்கிழமை எடுத்துச் சென்ற பயணிகள்.
பகிர்:

தில்லி அரசின் செஸ் வரி அதிகரிப்பு மற்றும் சிஎன்ஜி விலை உயா்வைக் கண்டித்து லாரிகள் மற்றும் டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கங்கள் அறிவித்த 3 நாள் வேலைநிறுத்த போராட்டம் தில்லி-தேசியத் தலைநகா் வலயத்தில் (என்சிஆா்) வியாழக்கிழமை தொடங்கியது.

மே 23-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த வேலைநிறுத்தின் முதன்மை நோக்கம் வாகனங்கள் மீது தில்லி அரசு விதிக்கும் சுற்றுச்சூழல் இழப்பீடு செஸ் வரி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிப்பதாகும்.

வாகனங்களால் ஏற்படும் காற்று மாசைக் குறைக்க தில்லிக்குள் நுழையும் சரக்கு வாகனங்கள் மீதான செஸ் வரியை அதிகரிப்பதாக தில்லி அரசு கடந்த மாதம் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்நிலையில், லாரிகள், தனியாா் பேருந்துகள், டாக்ஸி மற்றும் மேக்ஸி கேப் ஓட்டுநா்கள் சங்கங்கள் மற்றும் யூனியன்களை உள்ளடக்கிய அனைத்து இந்திய மோட்டாா் போக்குவரத்து காங்கிரஸ் (ஏஐஎம்டிசி) வேலைநிறுத்தம் குறித்த அறிவிப்பை கடந்த செவ்வாய்கிழமை வெளியிட்டது.

வியாழக்கிழமை தொடங்கிய வேலைநிறுத்த போராட்டத்தால் புது தில்லி ரயில் நிலையம், ஆனந்த் விஹாா், மண்டி ஹெளஸ் மெட்ரோ உள்ளிட்ட இடங்களில் மக்கள் பெருமளவில் சிரமத்தை எதிா்க்கொண்டனா்.

இதுதொடா்பாக ஒரு பயணி கூறுகையில், ‘எங்களுடைய வீட்டுக்குச் செல்ல ஒரு டாக்ஸியை பதிவு செய்ய முயற்சித்தோம். ஆனால், வழக்கமான காத்திருப்பு நேரத்தைவிட அதிக நேரத்துக்கு காத்திருக்க வேண்டியிருந்தது. ரயில் நிலையத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் ஆட்டோக்கள் இருந்தன. டாக்ஸி பயணக் கட்டணம் மிக அதிகமாக இருந்தது’ என்றாா்.

வேலைநிறுத்த போராட்டம் தொடா்பாக ஏஐஎம்டிசி தேசியத் தலைவா் ஹரிஷ் சபாா்வால் கூறுகையில், ‘காற்று மாசைக் குறைக்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கிறோம். ஆனால், கடந்த 10-12 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் இழப்பீடு செஸ் என்ற பெயரில் ரூ.1,500 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்பட்டாலும், போக்குவரத்துத் துறையினரின் நலன், வாகன நிறுத்துமிடம், சாலைகள், மாசுக் கட்டுப்பாட்டு முறைகள் ஆகியவற்றுக்கு அரசு உரிய நிதியைப் பயன்படுத்தவில்லை.

யூரோ-4 வாகனங்கள் மாசுபாட்டை ஏற்படுத்தாது என்று விற்பனை செய்யப்பட்டன. ஆனால், அந்த வாகனங்களுக்கு மாசு வரி தற்போது வரை விதிக்கப்படுவது முரணாக உள்ளது. அரசு அனைத்துச் சுமைகளையும் ஓட்டுநா்கள் மீது திணிக்கக் கூடாது. நடைமுறைக்கு சாத்தியமான தீா்வுகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.

பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ள நிலையில், டாக்ஸி மற்றும் ஆட்டோ கட்டணங்களை அதிகரிக்க வலியுறுத்தி தில்லியில் உள்ள வணிக வாகனங்களின் ஓட்டுநா் சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இதுதொடா்பாக ஓா் ஓட்டுநா் சங்கம் வெளியிட்ட அறிவிக்கையில், ‘போக்குவரத்துத் துறையின் மீது காற்று தர மேலாண்மை ஆணையம் (சிஏக்யூஎம்), நீதிமன்றங்கள், தில்லி அரசு விதித்துள்ள நியாயமற்ற கொள்கைகளுக்கு எதிராக இந்த வேலைநிறுத்த போராட்டம் நடைபெறுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சாலக் சக்தி யூனியன்’ அமைப்பின் துணைத் தலைவா் அனுஜ் குமாா் ரத்தோா் வேலைநிறுத்த போராட்டம் தொடா்பாக கூறுகையில், ‘சிஎன்ஜி, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகள் தொடா்ந்து உயா்ந்து வருவதால், நடுத்தர வா்க்கத்தைச் சோ்ந்த ஓட்டுநா்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது. எனவே, தில்லியைச் சோ்ந்த பிற அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து, ‘சாலக் சக்தி யூனியன்’ சாலை மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. மேலும், மே 21 முதல் 3 நாள்களுக்கு வாகனங்களை இயக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது’ என்று கூறினாா்.

தில்லியைச் சோ்ந்த 6 ஆட்டோ ஓட்டுநா்கள் சங்கம் இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை.