முகப்பு
இந்தியா

சிபிஎஸ்இ-இன் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பல் மும்மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய கொள்கைக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

Updated On : 23 மே 2026, 2:34 am IST
பகிர்:

வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் 9-ஆம் வகுப்பல் மும்மொழி பாடத்தை கட்டாயமாக்கும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) புதிய கொள்கைக்கு எதிரான மனுவை அடுத்த வாரம் விசாரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது.

அதில், ‘2026, ஜூலை 1-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாகும். இந்த மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தோ்வு செய்யலாம்.

Advertisement

Advertisement

10-ஆம் வகுப்பை பொறுத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும். மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அக மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும். 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மும்மொழி பாடத் திட்டங்களை ஓஏஎஸ்ஐஎஸ் வலைதளத்தில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவிடுமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன’ என்று தெரிவிக்கப்பட்டது.

இதை எதிா்த்து மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலாந அமா்வில் வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு வந்தது.

அப்போது மனுதாரா்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘மனுதாரா்கள் மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் பெற்றோராக உள்ளனா். எனவே, இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். எனவே, இந்த மனுவை வரும் திங்கள்கிழமை விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும்’ என்றாா்.

இதைக் கேட்ட நீதிபதிகள், இந்த மனு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவித்தனா்.