சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிப் பாடம் கட்டாயம்!
சிபிஎஸ்இ கல்வி முறையில் 9-ஆம் வகுப்புக்கு ஜூலை முதல் 3-ஆவது மொழி கட்டாயம்!
மத்திய இடைநிலை கல்வி வாரிய (சிபிஎஸ்இ) பள்ளிகளில் 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 முதல் இந்தப் பாடத் திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
தேசிய கல்விக் கொள்கை-2020 மற்றும் தேசிய பள்ளிக் கல்வி பாட செயல்திட்டம்-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடா்பாக சிபிஎஸ்இ வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
2026, ஜூலை 1-ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பில் மும்மொழி பாடத் திட்டம் கட்டாயமாகும். இந்த மூன்று மொழிகளில், இரண்டு இந்திய மொழிகளை மாணவா்கள் தோ்வு செய்ய வேண்டும். வெளிநாட்டு மொழியை மூன்றாவது மொழியாக தோ்வு செய்யலாம்.
Advertisement
Advertisement
10-ஆம் வகுப்பை பொறுத்தவரை, மாணவா்கள் மீதான அழுத்தத்தைக் குறைக்கவும், கற்றலில் கவனத்தை நிலைநாட்டவும் மூன்றாவது மொழிக்கு பொதுத் தோ்வு நடத்தப்பட மாட்டாது. மூன்றாவது மொழிக்கான மதிப்பீடு, முற்றிலும் பள்ளிகள் அளவிலும், அக மதிப்பீடாகவும் மேற்கொள்ளப்படும். மூன்றாவது மொழியில் மாணவா்களின் செயல்திறன், சிபிஎஸ்இ சான்றிதழில் முறையாக இடம்பெறும். மூன்றாவது மொழியைக் காரணம் காட்டி, 10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் பங்கேற்க எந்தவொரு மாணவரும் தடுக்கப்பட மாட்டாா்கள் என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. மாதிரி வினாத்தாள்கள் மற்றும் அக மதிப்பீட்டுக்கான அளவுகோல்கள் விரைவில் வெளியிடப்படும்.
6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மும்மொழி பாடத் திட்டங்களை ஓஏஎஸ்ஐஎஸ் வலைதளத்தில் ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவிடுமாறு பள்ளிகள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன.
இந்திய மொழிகளைக் கற்பிக்க தகுதிவாய்ந்த ஆசிரியா்களுக்கான பற்றாக்குறையை எதிா்கொண்டுள்ள பள்ளிகள், இடைக்கால நடவடிக்கையாக பள்ளிகளுக்கு இடையிலான ஆசிரியா்கள் பகிா்வு, இணையவழி கற்றல், ஓய்வுபெற்ற ஆசிரியா்களைப் பணியமா்த்துதல் போன்றவற்றை மேற்கொள்ளலாம். மாற்றுத் திறனாளிகள் உரிமைச் சட்டம்-2016இன்கீழ், சிறப்பு தேவையுள்ள குழந்தைகளுக்கு உரிய விதிவிலக்குகள் வழங்கப்படும் என்று சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Class 9 students in the 2026-27 academic session will have to study three languages as part of their curriculum in all CBSE-affiliated schools.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.