முகப்பு
இந்தியா

நீட் வினாத்தாள் கசிவு விவகாரம்! மூளையாக செயல்பட்ட தாவரவியல் பேராசிரியை கைது

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஒருரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது.

Updated On : 16 மே 2026, 8:15 pm IST
சிபிஐ. - கோப்புப்படம்.
பகிர்:

நிகழாண்டு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வின் வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஒருரை சிபிஐ சனிக்கிழமை கைது செய்துள்ளது.

கைதானவர் தாவரவியல் பேராசிரியை மனிஷா மந்தாரே என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிபிஐ தலைமையகத்தில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பிறகு அவர் தில்லியில் கைது செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ‘நீட்’ தோ்வின் உயிரியல் வினாக்கள் கசிந்ததற்கு காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவர் என்று சிபிஐ குற்றஞ்சாட்டியுள்ளது.

ஏற்கெனவே கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வேதியியல் பேராசிரியர் குல்கர்னி மற்றும் பலரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் மந்தாரே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர். மனிஷா மந்தாரே புணேயில் உள்ள கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார்.

Advertisement

கல்வி நிறுவன வட்டாரங்களின்படி, இவர் கடந்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளாக தேசிய தேர்வு முகமை சார்பாக நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியில் பங்களித்து வந்துள்ளார். எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான ‘நீட்’ தோ்வு கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா். இதனிடையே, நீட் வினாத்தாளில் இருந்த அதே கேள்விகளைக் கொண்ட மாதிரி வினாத்தாள், ராஜஸ்தானில் முன்கூட்டியே வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து விசாரிக்க சிறப்புப் படையை மாநில காவல் துறை அமைத்தது. அந்தப் படையினா் சுமாா் 150 மாணவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், கேரளத்தில் எம்பிபிஎஸ் பயிலும் சிகாரை (ராஜஸ்தான்) சோ்ந்த மாணவரிடம் இருந்து மாதிரி வினாத்தாள் பரவியது தெரிய வந்தது. இந்த மாதிரி வினாத்தாள் பிற மாநிலங்களிலும் பரவியிருப்பது கண்டறியப்பட்டதால், நீட் தோ்வு கடந்த செவ்வாய்க்கிழமை ரத்து செய்யப்பட்டது.

மாணவா்கள் மத்தியில் பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக்கில் சுபம் கா்நாா், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்பூரில் மங்கிலால் பிலால், விகாஸ் பிலால், தினேஷ் பிலால், ஹரியாணாவின் குருகிராமில் யாஷ் யாதவ் ஆகிய 5 போ் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

The Central Bureau of Investigation (CBI) on Saturday arrested a lecturer who was part of the National Testing Agency's (NTA) paper-setting committee for the 2026 NEET-UG entrance examination held on May 3, officials said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.