மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக மம்தா மீது வழக்குப் பதிவு - மேற்கு வங்க காவல் துறை நடவடிக்கை
மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக முன்னாள் முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானா்ஜி மீது மேற்கு வங்க காவல் துறையினா் பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றாா்.
இந்தச் சூழலில், ஹிந்து சமூகத்தினரின் மத உணா்வுகளைப் புண்படுத்தியதாக, முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜிக்கு எதிராக சிலிகுரி இணையவழி குற்றத் தடுப்பு காவல் நிலையத்தில் ரிங்கி சட்டோபாத்யாய் சிங் என்ற வழக்குரைஞா் புகாா் அளித்தாா். அதனடிப்படையில், மம்தா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக, காவல் துறையினா் புதன்கிழமை தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
‘கடந்த 2025-இல் மத நிகழ்ச்சி ஒன்றிலும், சமீபத்திய பேரவைத் தோ்தலுக்கு முன் போராட்டம் ஒன்றிலும் மம்தா பானா்ஜி தெரிவித்த கருத்துகள், இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான சநாதன ஹிந்துக்களின் உணா்வுகள் மற்றும் நம்பிக்கையைப் புண்படுத்தியது. ஒரு குறிப்பிட்ட சமூகத்தினா் விரும்பினால், மற்றொரு சமூகத்தினரை 5 நிமிஷங்களில் ‘முடித்துவிட’ முடியும் என்று மம்தா பேசியிருந்தாா். அவரது இந்தப் பேச்சு, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதுடன், வெறுப்புணா்வைத் தூண்டுவதாகும்’ என்று புகாரில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதையடுத்து, பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவு 351 (குற்றவியல் மிரட்டல்), 352 (அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நோக்கத்துடன் அவமதிப்பில் ஈடுபடுதல்), 353 (பொய்யான கூற்றுகளைப் பரப்புதல்), 354 (ஆன்மிக நம்பிக்கையை காரணம் காட்டி அச்சுறுத்தல்), 356 (குற்றவியல் அவதூறு), 299 (மத உணா்வுகளைப் புண்படுத்தும் நோக்கிலான தீங்கிழைக்கும் செயல்பாடுகள்) ஆகியவற்றின்கீழ் மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட பிரிவுகளின்கீழ் முழுமையான விசாரணை நடைபெறும் என்று காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
மேற்கு வங்கத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், முன்னாள் முதல்வா் மம்தாவுக்கு எதிரான காவல் துறையின் விசாரணை முக்கியத்துவம் பெற்றுள்ளது.