தமிழ்நாட்டில் குறிப்பாக சிற்றூர்களில், கிராமங்களில் படிக்கும் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு ஆங்கிலம் என்பது கடினமான பாடம்.
ஆங்கிலத்தில் பேசுவதும், ஆங்கிலத்தில் எழுதுவதும், ஆங்கிலம் வாசிப்பதும் பெருநகரத்தில் இருக்கும் மாணவர்களுக்கு எப்படி சுலபமாக வருகிறது என்பதை சிற்றூர், கிராமங்களில் வசிக்கும் மாணவர்கள் ஆச்சரியமாகவும் பார்க்கின்றனர். அதே நேரம் பொறாமையாகவும் பார்க்கின்றனர்.
வேலைவாய்ப்புத் தேர்வுகள், வேலைவாய்ப்புக்கான நேர்காணல்களில் ஆங்கிலத்தில் பேசுவது என்பது மிகவும் இன்றியமையாத ஆற்றலாகவே கவனிக்கப்படுகிறது. இந்தத் தேர்வுகளில் கிராமங்கள், சிற்றூர்களில் ஆரம்பக் கல்வி பயின்றவர்கள் தங்களை வெளிப்படுத்திக்கொள்வதில் மிகவும் சிரமப்படுகின்றனர்.
ஆங்கிலத்தில் சரளமாக இருக்க வேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் இருக்கும் மாணவர்கள், அதற்கான முறையான முயற்சிகளை மேற்கொள்வதுதான் ஒரே வழி.
ஒரு மொழியில் சரளம் என்பது அந்த மொழியில் பேச, எழுத, படிக்க இயலும் என்பதாகும். இந்த மூன்று திறன்களை ஒன்றுடன் ஒன்று தொடர்புகொண்டு கற்க வேண்டும்.
ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்க்க வேண்டுமெனில், ஆங்கிலத்தில் பிறர் உரையாடுவதைக் கேட்க வேண்டும். இதற்கு ஆங்கிலச் செய்திகளும் ஆங்கிலத்தில் நடத்தப்படும் நேர்காணல்களும் உதவும்.
தினசரி தமிழில் செய்தித்தாள் வழியே செய்திகளை வாசித்து செய்திகளை உள்வாங்கிக்கொண்டும், நன்கு புரிந்துகொண்ட பிறகு அதே செய்திகளை, தொலைக்காட்சி செய்திகளில் ஆங்கிலத்தில் சொல்லப்படும்போது கவனித்தால் மிகவும் உதவியாக இருக்கும்
ஆங்கிலத்தில் படிக்க வேண்டும், ஆனால் எங்கிருந்து தொடங்குவது எனத் தெரியவில்லை என்றிருக்கும் அனைவரும், காமிக்ஸ் போன்ற படக்கதைகளில் தொடங்கலாம். தமிழில் நன்கு தெரிந்த கதைகளை படக்கதைகளாக வாசிக்கும்போது ஆங்கிலம் படிப்படியாக பயிற்சி ஆகும்.
ஓரளவு பயிற்சி ஆன பின்பு படமில்லாத கதைகளை வாசிக்கப் பழக வேண்டும். இதன் தொடர்ச்சியாக செய்தித்தாள்கள் வாசிக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் இருக்கும் மொழிப்பாடங்களைக் கற்பதில் சிறக்க வேண்டும் என்றால், பாடப் புத்தகத்தைத் தவிரவும் வேறு நூல்கள் வாசிக்க வேண்டும். அப்போதுதான் மொழி அறிவு பலமாக வளரும்.
ஆங்கிலத்தில் படிக்க வேண்டும், பேச வேண்டும், எழுத வேண்டும் என்ற ஆசைக்கு முதல் எதிரி யார் தெரியுமா..
பயம்தான் முதல் எதிரி!! அதுவும் என்ன பயம்.. தவறு செய்துவிடுவோமோ எனும் பயம். அடுத்தவர் கேலி பேசுவார்களே எனும் பயம்!
இந்தப் பயம் இயல்பானதுதான். ஆனால், இந்தப் பயத்தை பயிற்சியின் மூலம் வெல்லமுடியும்.
படிப்படியாக நேரம் ஒதுக்கிப் பயிற்சி எடுப்பது மூலம் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச, படிக்க, எழுத இயலும்.
ஆங்கிலத்தின் இலக்கணங்கள் குறித்த தயக்கங்களை முதல் கட்டத்திலேயே யோசித்துப் பயந்து முயற்சியே செய்யாதவர்களே அதிகம்.
ஆங்கிலத்தின் இலக்கணத்தைத் தெரிந்துகொள்வதைக் காட்டிலும், ஆங்கிலச் சொற்களை அதிகம் தெரிந்துகொள்வதன் மூலம் இந்த சிக்கலில் இருந்து வெளியே வரலாம்.
இதற்கென ஒரு நோட்டுப் புத்தகம் தனியே வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
நீங்கள் தினசரி வாழ்வில் பார்க்கும் பொருட்களின் பெயரை அந்த நோட்டுப் புத்தகத்தில் எழுதுங்கள்.. தமிழில் எழுதுங்கள்.. ஒரு நாளைக்கு பத்து பொருள், பெயர் என்பதாக கணக்கு வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக,
வாழைப்பழம்
பெயர்ப் பலகை
நாற்காலி
மிதிவண்டி
பேருந்து
இப்படி சாதாரணமாகப் புரிந்துகொள்ள இயலும் பொருட்களின் பெயர்களை எழுதுங்கள்.
இந்தத் தமிழ்ச் சொற்களுக்கான ஆங்கிலச் சொற்களைக் கண்டுபிடித்து, அதனை ஒவ்வொரு தமிழ்ச் சொல்லுக்கும் எதிரே எழுதுங்கள்.
வாழைப்பழம் – Banana
பெயர்ப் பலகை – Name Board
நாற்காலி - Chair
மிதிவண்டி - Bicycle
பேருந்து - Bus
இப்படி தினம் பத்து சொல்லாக எழுதிக்கொண்டே வந்து, பத்து நாட்கள் கடந்த பின்பு உங்களிடம் இப்போது நூறு சொற்கள் சேர்ந்திருக்கும். இந்த நிலையே ஒரு பலமான இலக்கு. இங்கேதான் நீங்கள் ஆங்கிலம் கற்கத் தொடங்குகிறீர்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?! ஆனால் அதுதான் உண்மை!
இனி ஒவ்வொரு சொல்லுக்குமான படங்களைத் தேடி எடுத்து வெட்டி, ஒரு அட்டைகளில் ஒட்டுங்கள். இந்தப் படங்களை நீங்கள் பதினோறாவது நாளிலிருந்து பார்த்துப் பார்த்து அந்தப் படங்களில் இருக்கும் பொருட்களின் பெயரை ஆங்கிலத்தில் மட்டுமே சிந்திக்க வேண்டும். உதாரணமாக, வாழைப்பழத்தின் படத்தைப் பார்க்கும்போது உங்கள் மனம் இது Banana என்றும், பேருந்து படத்தைப் பார்க்கும்போது இது bus என்றும் ஆங்கிலத்தில் மட்டுமே உள்மனதில் சொல்லிக்கொள்ளவும் சிந்திக்கவும் பழக வேண்டும். தொடக்கத்தில் இது வேடிக்கையாக இருக்கும். ஆனால் நம் தாய்மொழியான தமிழை நம் மனது இப்படித்தான் வார்த்தைகளாக பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொண்டிருக்கிறது என்பதே விஞ்ஞானம் சொல்லும் உண்மை. நம்மைச் சுற்றி இருப்பவர்கள் தமிழில் பேசி, தமிழில் கேள்வி கேட்டு, தமிழில் பதில் சொல்வதால் தமிழ் சுலபமாக பழக்கமாகிவிட்டது, ஆங்கிலமும் அப்படித்தான்.
இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்துகொண்டே இருக்க வேண்டும். இதனுடன் தமிழின் ஒவ்வொரு வினைச் சொல்லுக்குமான ஆங்கில வினைச் சொல்லைக் கண்டுபிடித்து எழுதி வர வேண்டும். உதாரணமாக,
ஓடுதல் - Running
நடத்தல் - Walking
பேசுதல் - Speaking
எழுதுதல் - Writing
தாவுதல் - Jumping
மறைந்துகொள்ளுதல் – Hiding
இப்படி வினைச் சொற்களுக்கான படங்களையும் சேகரித்து தனித் தனியே அட்டைகளில் ஒட்டி, அவற்றை வரிசையாகப் பார்த்து ஆங்கில சொற்களை மட்டுமே கொண்டு சிந்திக்க நினைக்க மனத்தைப் பழக்க வேண்டும்.
பொருட்களின் பெயர்கள், வினைச் சொற்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் என இந்தப் பயிற்சியினை விரிவு செய்துகொண்டும், விடாது தொடர்ந்தும் செய்துவர வேண்டும்.
இதனை செய்யத் தொடங்கிய பின்பு, மனதில் இதையெல்லாம் கொண்டு எப்படி வாக்கியங்கள் அமைப்பது எனும் ஆவல் இயல்பாகவே உருவாகும். ஆனால் அந்த ஆவலையும் மீறி ஒருவிதமான பயம் தலை தூக்கும் என்பது இயற்கை.
இதே சொற்களைக் கொண்டு தமிழில் வாக்கியம் அமைத்துப் பார்ப்பதுதான் தொடக்க நிலை. ஆனால் இங்கேயும் தமிழ்ச் சொற்களைத் தவிர்க்க வேண்டும். அதாவது, நான் வாழைப்பழம் வாங்கி வந்தேன் என்பதை நான் Banana வாங்கி வந்தேன் என எழுதிப் பார்க்கும்போது, அந்தப் பொருள் குறித்த உங்களின் ஆங்கில சொல் அறிவு அப்படியே இருக்கும். இனி வாக்கியம் அமைப்பதை மட்டுமே சரிவரக் கற்க வேண்டும்.
ஆங்கில இலக்கணம் என்றில்லை, எந்த மொழிக்கான இலக்கணமும் மிகவும் அவசியமானது. மொழி இலக்கணப் பாடத்தில் கடந்த காலம், நிகழ் காலம், எதிர் காலம் இவற்றைக் குறிக்கும் சொற்களும் வினைச் சொற்களும் மிகவும் முக்கியமானவை.
ஆங்கிலத்தில் வினைச் சொற்களைக் காலத்துடன் இணைந்து கையாள்வதில் தமிழ் மாணவர்களுக்கு இருக்கும் சிரமம் இயல்பானது.
தமிழில் ஒரே வினைச் சொல்லை சிறிய அளவு மாற்றம் கொண்டு கடந்த காலச் சொல்லாகவும், நிகழ் காலச் சொல்லாகவும், எதிர் காலச் சொல்லாகவும் உணர்த்த இயலும். உதாரணமாக,
நடந்தேன்
நடக்கிறேன்
நடப்பேன்
என்பது மூன்று காலங்களை முறையே குறிக்கிறது.
ஆனால், ஆங்கிலத்தில் இப்படி நேரடியாக காலத்துடன் வினைச் சொல்லைக் குறிக்க சில சமயம் எளிமையான முறை உண்டு. பலமுறை அதற்கென தனியே இலக்கணம் உண்டு. இந்த வேறுபாட்டை மட்டும் சரிவரப் புரிந்துகொண்டுவிட்டால் ஆங்கிலம் கற்பது மேலும் சுலபமாகும்.
அடுத்த வாரம், சுலபமாக ஆங்கிலம் கற்கும் நுணுக்கங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்வோம்.
(தொடரும்)
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.