சுற்றிலும் நிலப்பரப்பால் சூழப்பட்ட நாடு ஆப்கானிஸ்தான், சுருக்கமாக, ஆப்கன் - வடகிழக்கே சீனா, கிழக்கிலும் தெற்கிலும் பாகிஸ்தான், மேற்கில் ஈரான், வடக்கே துர்க்மேனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான். நாடு முழுவதும் வறண்ட வானிலை, பாறைப் பகுதிகள்.
அமைந்திருக்கிற இடத்தின் காரணமாகக் காலங்காலமாக இந்த நிலத்தின் வழியே மக்கள் புலம்பெயர்ந்து வந்திருக்கின்றனர்; படையெடுப்புகள் நடந்திருக்கின்றன. பல நூற்றாண்டுகளாக வணிகத் தடமாகவும் பெரும் பேரரசுகளின் ஆட்சிப் பகுதிகளாகவும் திகழ்ந்திருக்கிறது.
இவர்கள் எல்லாருமே ஆப்கானிஸ்தானின் பண்பாட்டில் தங்கள் அடையாளங்களை விட்டுச் சென்றிருக்கின்றனர். இந்த நாட்டில் இப்போது எண்ணற்ற இனக் குழுக்கள்.
உலகில் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான ஆப்கனில் மக்கள் பெரும்பாலும் இன்னமும் வறிய நிலையிலேயே வாழ்கின்றனர். சிறிய, மலைப் பகுதி கிராமங்களில் வசிக்கின்றனர். இதன் வரலாறு நெடுகிலும் படையெடுப்புகள், குழப்பங்கள், அரசியல் கலகங்கள், உள்நாட்டுப் போர்கள்...
சுமார் கி.மு. 1500-ல் ஆரியர்கள் படையெடுத்தனர். கி.மு. 500-களின் மத்தியில் ஆப்கனில் பக்தரியா பகுதியை பெர்சியர்கள் வெற்றி கண்டனர். கி.மு. 330-ல் அலெக்சாந்தர் வரும் வரை இவர்களுடைய ஆட்சிதான். 85 ஆண்டுகளுக்குப் பின் கிளர்ந்தெழுந்து கிரேக்கர்களிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டனர். தொடர்ந்து, 150 ஆண்டுகளுக்குப் பிறகு, கி.பி. 50 ஆம் ஆண்டில் குஷானர் பேரரசு உருவானது. அதுவே விரைவில் சிந்துச் சமவெளியிலும் மேற்கு கங்கை சமவெளியிலும் பரவியது.
(குஷானர்கள் புத்த மதத்தினர். மத்திய ஆப்கனில் பாமியான் மலைத் தொடரின் மணற்குன்றுகளில் இவர்கள் வடித்தெடுத்திருந்த புத்தரின் பிரமாண்டமான (174 அடி, 53 மீட்டர்கள் உயரம்) இரட்டைச் சிற்பங்களைத்தான் தலிபான்கள் நொறுக்கிச் சிதைத்தனர்).
தொடர்ந்து, அரபுகளின் மூலம் இஸ்லாம் நுழைந்தது. பின்னர் துருக்கியர் வந்தனர். செங்கிஸ்தான் தலைமையில் மங்கோலியர்கள் வந்தனர். பிறகு தைமூர்கள். வரலாறு இவ்வாறு நீள்கிறது. 1973-ல் குடியரசு. அடுத்தடுத்து நிறைய அரசியல் மாற்றங்கள். தற்போது தலிபான்களின் ஆட்சியின் கீழ்.
ஆப்கனில் சுமார் 20-க்கும் மேற்பட்ட இனக்குழுக்கள் இருக்கின்றன. இவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி மொழி, தனித்தனிப் பண்பாடு. ஆப்கனைத்தான் இவர்கள் தங்கள் தாய்நாடென அழைக்கின்றனர். இஸ்லாம்தான் இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கிறது. பெரும்பாலான ஆப்கானியர்கள் எங்கிருந்தோ படையெடுப்பிலோ, குடியேற்றத்திலோ, புலம்பெயர்ந்தோ இங்கே வந்து சேர்ந்தவர்கள்தான். இந்த மக்கள் பலருக்கும் தங்கள் நாட்டைவிடவும் இனக்குழு மீதுதான் பற்றுதல் அதிகம். இதுவும் இயல்பான ஒன்றே.
1979-ல் ரஷியா நுழைந்து செல்வாக்கு செலுத்திய காலத்தில் ஆப்கன் மக்களில் நான்கில் ஒரு பங்கினர் நாட்டை விட்டு பாகிஸ்தான், ஈரான் போன்ற நாடுகளுக்கு வெளியேறினர்.
நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வோர் இனக்குழுவைச் சேர்ந்த மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அதிகளவில் பஷ்தூன்கள், இரண்டாம் நிலையில் தஜிக்குகள், உஷ்பெக்குகள், துர்க்மான்கள், பலூச்கள், பிரஹூயிகள், ஹசரஸ்கள்...
சுமார் 12 சதவிகித நிலம்தான் விவசாயத்துக்கு ஏற்றது. ஆனால், 85 சதவிகித மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்கின்றனர்! அதிகம் பயிர் செய்யப்படுவது கோதுமை. அடுத்ததாக பார்லி, மக்காச்சோளம், பருத்தி, பழங்கள்...
புகழ்பெற்ற கைபர் கணவாய் இங்கேதான் இருக்கிறது!
நாட்டின் அதிகாரப்பூர்வ பெயர் - ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம். தற்போது தலிபான்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மக்கள்தொகை – சுமார் 5 கோடி. 99 சதவிகிதம் முஸ்லிம்கள்; இவர்களில் 89 சதவிகிதத்தினர் சன்னி பிரிவினர், மற்றவர்கள் ஷியா பிரிவினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.