முகப்பு
தற்போதைய செய்திகள்

மழை வேண்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நந்திக்கு வருண ஜபம்

மழை வேண்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நந்திக்கு வருண ஜபம் ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

மழை வேண்டி திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் நந்திக்கு வருண ஜபம் ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டது.

பருவமழை பொய்த்ததன் விளைவாக டெல்டா மாவட்டங்களில் பயிர் விளைச்சலுக்கு தேவையான தண்ணீரின்றி பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாக புதுவை மாநிலத்தின் நெற்களஞ்சியம் எனக் கூறப்படும் காரைக்கால் மாவட்டத்தில் சம்பா பயிர் செய்யப்பட்ட பகுதிகளில் தண்ணீர் வறட்சியால் விவசாயிகள் கவலைக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில் திருநள்ளாறு ஸ்ரீ பிரணாம்பிகை சமேத ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலில நந்திக்கு வருண ஜபம் செய்வதன் மூலம் மழை பெய்யுமெனவும், இதற்கான நடவடிக்கையில் ஈடுபடவேண்டுமென திருநள்ளாறு வட்டாரத்தில் உள்ள சில கிராமத்தின் விவசாயிகள் கோவில் நிர்வாகத்தை அணுகி வலியுறுத்தினர்.

இதையொட்டி மார்கழி மாதம் முதல் தேதியான ஞாயிற்றுக்கிழமை காலை ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் சன்னிதியில் அமைந்துள்ள நந்திக்கு வருண ஜபம் செய்யப்பட்டது. நந்திக்கு மேல் மலர்களாலும், பழங்களாலும் பந்தல் போடப்பட்டிருந்தது. நந்தியை சுற்றி சுவர் எழுப்பி தொட்டிக்குள் நந்தி இருக்கும் வகையில் அமைக்கப்பட்டது. இதில் பூஜை செய்யப்பட்ட தண்ணீரை சிவாச்சாரியார் ஊற்றினார். தொடர்ந்து சிவாச்சாரியார்கள் குடத்தில் நீர் கொண்டுவந்து நந்தி மூழ்கும் அளவிற்கு தண்ணீரை நிரப்பினர்.

தொடர்ந்து நந்திக்கு மகா தீபாராதனை நடத்தப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்களும், ஓதுவார்கள் பாடல் பாடியும், மழை வருவதற்குரிய ராகத்தில் நாகசுரம் வாசிப்பும் அச்சமயம் செய்யப்பட்டது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.

இக்கோவிலில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு வருண ஜபம் செய்யப்பட்டு மழை பெய்ததாகவும், தற்போதைய வறட்சியைப் போக்கும் வகையில் நிகழாண்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →