முகப்பு
தற்போதைய செய்திகள்

நடராஜர் கோயில் "மார்கழி ஆருத்ரா தரிசனம்": பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் பற்பகல் 3.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்

Updated On : 2 ஜனவரி, 2024 at 8:05 PM
பகிர்:

சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசனம் பற்பகல் 3.45 மணிக்கு நடைபெற்றது. ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பு உள்ள நடனப்பந்தலில் நடனமாடி ஆனித்திருமஞ்சன தரிசன காட்சியளித்தனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று 'நடராஜா', 'சிவசிவா' என கோஷமிட்டு தரிசனத்தை கண்டுகளித்தனர்.

ஸ்ரீநடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த டிச.19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  நேற்று (வியாழக்கிழமை) தேர்த்திருவிழா நடைபெற்றது.  பின்னர் இரவு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் ஏககால லட்சார்ச்சனை நடைபெற்றது.  இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் மகாபிஷேகம் நடைபெற்றது. பால், தேன், விபூதி, பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்டவை குடகுடமாக அபிஷேகம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பார்த்து தரிசித்தனர்.

காலை 6 மணி முதல் 10 மணி வரை ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீநடராஜமூர்த்திக்கும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளுக்கும் திருவாபரண அலங்காரமும், சிறப்பு அர்ச்சனைகளும் செய்யப்பட்டன. சிதசபையில் உற்சவ ஆச்சாரியாரால் ரகசிஸ பூஜை நடத்தப்பட்டது. பஞ்சமூர்த்திகள் வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3.45 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீமந்நடராஜமூர்த்தியும், ஸ்ரீசிவகாமசுந்தரி அம்பாளும் நடனப்பந்தலில் முன்னும், பின்னும் 3 முறை சென்று நடனமாடி மார்கழி ஆருத்ரா தரிசன காட்சியளித்தனர். பின்னர் சித்சபா பிரவேசம் நடைபெற்றது. தரிசனக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

விழா ஏற்பாடுகளை உற்சவ ஆச்சாரியார் எஸ்.வி.தில்லைநாகபூஷண தீட்சிதர், பொதுதீட்சிதர்களின் செயலாளர் ஏ.ஆனந்ததாண்டவ தீட்சிதர், துணைச் செயலாளர் ரா.வெ.கிருஷ்ணசாமி தீட்சிதர் மற்றும் அறநிலையத்துறை செயல்அலுவலர் க.சிவக்குமார் ஆகியோர் செய்துள்ளனர். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா நேரடி மேற்பார்வையில்  சிதம்பரம் ஏஎஸ்பி எம்.துரை தலைமையில் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தார்.  குடிநீர் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை நகரமன்றத் தலைவர் எஸ்.நிர்மலாசுந்தர், ஆணையர் (பொறுப்பு) ஆர்.செல்வராஜ் ஆகியோர் செய்தனர். போலீஸாருக்கு உதவியாக ஊர்க்காவல் படையினர், பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ், என்சிசி மாணவர்கள் மற்றும் போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் கிழக்கு கோபுர வாயிலில் சுமார் 5 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சியை அகில பாரத ஐயப்பா சேவை சங்க மாவட்டத் தலைவர் யாகமூர்த்தி தொடங்கி வைத்தார்.  ஐயப்பா சேவா சங்க மாவட்டச் செயலாளர் சுவாமிநாதன்,  சேவா சங்க நிர்வாகிகள் சிவராமன், வி.சங்கர், கே.கணேசன், எஸ்.கலியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தமிழ்நாடு விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம் சார்பில் அதன் மாநிலத் தலைவர் ஜி.சேகர் தலைமையில் சுமார் 2 ஆயிரம் பேருக்கும்,  அன்னதானம் வழங்கப்பட்டது.  இந்து ஆலயபாதுகாப்புகுழு சார்பில் சுமார் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.