மூழ்கிய இத்தாலிய கப்பலில் இருந்து புதுவை ஊழியர் மீட்பு
புதுச்சேரி, ஜன.16: இத்தாலி அருகே உள்ள காக்லியோ தீவு அருகில் மூழ்கிய இத்தாலி நாட்டு சொகுசு பயணிகள் கப்பலில் பணியாற்றி வந்த புதுச்சேரி இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார். புதுச்சேரி முதலியார்பேட்டையை,
புதுச்சேரி, ஜன.16: இத்தாலி அருகே உள்ள காக்லியோ தீவு அருகில் மூழ்கிய இத்தாலி நாட்டு சொகுசு பயணிகள் கப்பலில் பணியாற்றி வந்த புதுச்சேரி இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார்.
புதுச்சேரி முதலியார்பேட்டையை, உழந்தைகீரப்பாளையத்தை சேர்ந்தவர் தேவேந்திரன். ஏ.எஃப்.டி.மில் ஊழியர். இவரது மகன் ராம்குமார் (28). இவர் இத்தாலி நாட்டைச் சேர்ந்த கோஸ்டா கான்கார்டியா என்ற சொகுசு பயணிகள் கப்பலில் சமையல் கலை நிபுணராக வேலை செய்து வந்தார். இந்த கப்பல் வெள்ளிக்கிழமை இரவு, காக்லியோ தீவு பகுதியில் பாறையில் மோதி கடலில் மூழ்கியது. அப்போது அந்த கப்பலில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் 4200 பேர் இருந்துள்ளனர். இதில் 16 பேரைத் தவிற மற்ற அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். இதில் இதுவரை 6 பேர் இறந்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பெற்றோருக்கு ராம்குமார், சனிக்கிழமை இரவு போன் செய்து, தான் உயிருடன் இருப்பதாகவும், மீட்கப்பட்ட மற்ற நாட்டு ஊழியர்களை, அந்தந்த நாடுகளைச் சேர்ந்த தூதரக அதிகாரிகள் வந்து பார்வையிட்டு செல்வதாகவும், இந்தியா தரப்பில் யாரும் வரவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தேவேந்திரன், புதுச்சேரி மக்களவை உறுப்பினரும், மத்திய இணையமைச்சருமான வி.நாராயணசாமியை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து முறையிட்டார். பின்னர் நாராயணசாமியின் முயற்சியால், இத்தாலி நாட்டைச் சேர்ந்த இந்திய தூதரக அதிகாரிகள், மீட்கப்பட்ட இந்தியர்களை சந்தித்து, அவர்களை நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.
இது குறித்து மத்திய இணையமைச்சர் வி.நாராயணசாமியிடம் கேட்டபோது அவர் கூறியது:
இத்தாலியில் மூழ்கிய கப்பலில், புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார் இருந்ததாகவும், அவர் தற்போது மீட்கப்பட்டு, இருப்பதாகவும், அவர் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை இழந்துள்ள நிலையில், அவர் பத்திரமாக நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கப்பலில் மொத்தம் 130 இந்தியர்கள் இருந்தனர். அவர்களை இந்தியா கொண்டு வர வேண்டும் என்று, பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கரமேனனிடம் தொடர்புகொண்டு தெரிவித்தேன். அவர் வெளியுறவுச் செயலர் மத்தாயிடம் கூறி நடவடிக்கை எடுக்கக் கோரினார். இதைத் தொடர்ந்து நத்தாய் எடுத்த நடவடிக்கையின் பேரில், இத்தாலியில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள், மூழ்கிய கப்பலில் இருந்து மீட்கப்பட்ட, ஊழியர்கள் மற்றும் பயணிகள் தங்கவைக்கப்பட்டுள்ள இடத்துக்குச் சென்று, இந்தியர்களை சந்தித்து பேசியுள்ளனர். இதில் புதுச்சேரியைச் சேர்ந்த ராம்குமார் நலமாக இருப்பது தெரியவந்தது. மீட்கப்பட்ட இந்தியர்கள் அனைவரும் பாஸ்போர்ட் உள்ளிட்ட உடமைகளை இழந்துள்ளாதால், அவர்களை பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் நாராயணசாமி.