தீபாவளி போனஸ் தராததை கண்டித்து காரைக்கால் துறைமுக வாயில் கதவை மூடி நிரந்தர ஊழியர்கள் போராட்டம்
தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து துறைமுகத்தின் நிரந்தர ஊழியர்கள், துறைமுக வாயில் கதவை மூடி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
தீபாவளி போனஸ் வழங்காததை கண்டித்து துறைமுகத்தின் நிரந்தர ஊழியர்கள், துறைமுக வாயில் கதவை மூடி திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் துறைமுகப் பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
காரைக்காலில் இயங்கும் மார்க் நிறுவனத்தின் காரைக்கால் துறைமுகத்தில் (காரைக்கால் போர்ட்) சுமார் 400-க்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும், நூற்றுக்கணக்கான ஒப்பந்ததாரர்கள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்ததாரரின் கீழ் பணியாற்றும் தொழிலாளர்கள் உள்ளனர்.
துறைமுகத்தில் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றுவோருக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியையொட்டி வழங்கப்படும் போனஸ் தொகை நிகழாண்டு தரவில்லையெனக் கூறி, திங்கள்கிழமை துறைமுக வாயில் கதவை மூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வாயில் முன் அமர்ந்து துறைமுக நிர்வாகத்திற்கு எதிராக கோஷம் எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் கூறியது : கடந்த 4 ஆண்டுகளாக துறைமுகத்தில் நிரந்தர ஊழியர்களாக பணியாற்றி வருகிறோம். இதுவரை தீபாவளிக்கான போனஸ் தரப்படவில்லை. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் இன்கிரீமென்ட் தரப்படுவதும் இதுவரை தரப்படவில்லை. துறைமுகத்தின் செயல்பாடுகள் ஊழியர்களை ஏமாற்றும் விதத்தில் உள்ளது.
மார்க் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹெலிஜென் நிறுவனத்தின் சார்பில் பணியாற்றி வந்தோம். அண்மையில் ஹெலிஜென் பெயர் மாற்றப்பட்டு அல்பா என பெயரில் அந்நிறுவனம் இயங்குகிறது. ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காகவே அடிக்கடி நிறுவனப் பெயர் மாற்றப்படுகிறது. இச்செயலை கண்டிக்கிறோம். நவ.30 இன்கிரீமென்ட் தரப்படுமென்ற நிர்வாகத்தின் உறுதி மீறப்பட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்டதால் துறைமுகத்தின் உள்ளேயிருந்து, வெளியிலிருந்தும் லாரி போக்குவரத்து முடங்கியது. துறைமுக நிர்வாக உதவிப் பொது மேலாளர் ராஜேஷ்வர்ரெட்டி, போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சு நடத்தினார். போனஸ் தொகை புதன்கிழமை வாக்கில்தான் கிடைக்குமென அவரது வாதத்தை ஊழியர்கள் ஏற்காமல் போராட்டத்தை தொடர்ந்தனர்.
கடந்த சனிக்கிழமை ஒப்பந்தத் தொழிலாளர்கள் தங்களுக்கு ரூ.10 கோடி வரை துறைமுக நிர்வாகம் நிலுவைத் தொகை வைத்திருப்பதாகக் கூறி, வாயில் கதவை மூடி மறியலில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிச்சையெடுத்த ஊழியர் : ஊழியரில் ஒருவர் பொருளாதாரத்தில் மிகுந்த நலிந்த நிலையில் உள்ளதாகவும், தீபாவளிக்கு ஆடை வாங்கக்கூட நிதியாதாரம் இல்லையெனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டபோது தமது கைக்குட்டையை தரையில் விரித்தார். ஊழியர்கள் இயன்ற தொகையை அதில் போட்டனர். ஊழியர் பிச்சையெடுக்கும் நிலைக்கு துறைமுக நிர்வாகம் தள்ளியுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டோர் கூறினர்.