அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தெரிவித்தார்.
அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தெரிவித்தார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் நிதிநெருக்கடி காரணமாக ஆள்குறைப்பு, ஊதிய குறைப்பு ஆகியவை செய்யப்போவதாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து ஆலோசனைக் கேட்டு கடந்த நவ.7-ம் தேதி அனைத்து சங்கங்களையும் பல்கலைக்கழக நிர்வாகம் அழைத்து கூட்டம் நடத்தியது. அப்போது ஆள்குறைப்போ, ஊதியக்குறைப்போ செய்யக்கூடாது என அனைத்து சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்து கூட்டத்தை விட்டு வெளியேறினர்.
பின்னர் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் சங்க கூட்டமைப்பினர் தொடர் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். ஆசிரியர் மற்றும் ஊழியர்களுக்கு ஆதரவாக அனைத்து கட்சி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் ஆள்குறைப்போ, ஊதியக்குறைப்போ இல்லை என முடிவு செய்யப்பட்டுள்ளதாக துணனைவேந்தர் டாக்டர் எம்.ராமநாதன் அறிவித்தார். இதனையடுத்து எழுத்து பூர்வமாக அளித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெறுவோம் என பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் அறிவித்தார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் சிண்டிகேட் கூட்டத்தில் பரிந்துரை செய்த முடிவுகளை சுற்றறிக்கையாக வழங்கினார். அதில் ஆள்குறைப்பு, ஊதியகுறைப்பு கிடையாது, அரசிடம் நிதி கோருவது, குழு அமைத்து நிதிநெருக்கடிக்கு தீர்வு காணுவது என கூறப்பட்டிருந்தது.
இதனையடுத்து பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பு பொதுக்குழுக்கூட்டம் திங்கள்கிழமை கூடியது. கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன் தலைமை வகித்தார். பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர். பின்னர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் உதயசந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில் 'பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் 4 உறுதிமொழிகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கூட்டு நடவடிக்கை குழுவில் போராட்ட நடவடிக்கைகளை தற்போது ஒத்திவைக்க முடியு செய்யப்பட்டுள்ளது' என்றார். ஊழியர் சங்கத் தலைவர் சி.மதியழகன் தெரிவிக்கையில் 'இந்த போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாரேனும் ஒரு ஊழியருக்கு ஊதிய குறைப்பு செய்தாலும் உடனடியாக போராட்டத்தில் இறங்குவோம். நிதிசிக்கலுக்கு எங்கள் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை வழங்க தயாராக உள்ளோம். கூட்டமைப்பில் 10 பேர் கொண்ட கண்காணிப்பு குழு நியமித்துள்ளோம். இக்குழுவினர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் தவறுகள், முறைகேடுகளை தட்டி கேட்பார்கள்' என்றார் சி.மதியழகன்.