போலீஸ்காரர் போல நடித்து ரூ.15 லட்சம் மோசடி: ஒருவர் கைது; ரூ.5.70 லட்சம் பறிமுதல்
ஈரோட்டில் போலீஸ்காரர் போல நடித்து ரூ.15 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை ஈரோடு தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.5.70 லட்சத்தை போலீஸார்
ஈரோட்டில் போலீஸ்காரர் போல நடித்து ரூ.15 லட்சம் மோசடி செய்த சம்பவம் தொடர்பாக ஒருவரை ஈரோடு தாலுகா போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து ரூ.5.70 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வாய்க்கால்மேடு அடைப்புத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (32). இவர் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது செல்போனுக்கு ஆகஸ்ட் மாதத்தில் தொடர்புகொண்ட ஒரு நபர், தங்களிடம் சுத்தமான தங்கக் கட்டிகள் கிலோ கணக்கில் உள்ளன. அதை குறைந்த விலைக்கு கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
சில நாள்கள் கழித்து மீண்டும் தொடர்புகொண்ட அதே நபர், அதிக மதிப்புள்ள தங்கக் கட்டியை குறைந்த விலைக்கு கொடுப்பதாகவும், அதை விற்றால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்றும் பேசினாராம். பேரம் பேசி ஒருவழியாக ரூ.15 லட்சத்துக்கு 3.5 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிக்கொள்வதாக முருகேசன் ஒத்துக்கொண்டாராம்.
இந்நிலையில், ரூ.15 லட்சத்துடன் ஈரோடு ரயில் நிலையத்துக்கு அக்.13-ம் தேதி முருகேசன் வந்தார். சென்னிமலை சாலையில் நின்றுகொண்டிருந்த 2 பேர், அவரை அழைத்துக்கொண்டு முத்தம்பாளையத்துக்குச் சென்றனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சிறிது நேரத்தில் தங்கக் கட்டிகளை எடுத்து வருவதாகக்கூறி ஒரு வீட்டுக்குள் சென்றார்களாம்.
பின்னர் சிறிதுநேரத்தில் பதிவுஎண் இல்லாத காரில் போலீஸ் சீருடையில் வந்த 4 பேர், இங்கு நிற்கக்கூடாது என மிரட்டினார்களாம். ஏற்கெனவே வீட்டுக்குள் சென்ற 2 பேர், அப்போது திரும்பிவந்து முருகேசனை அழைத்துக்கொண்டு மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
வரும் வழியிலேயே போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து விரட்டி வருவதால் பின்னர் தங்கக் கட்டிகளை தருவதாகக்கூறிவிட்டு தப்பிவிட்டார்களாம். முருகேசனிடம் இருந்த செல்போனையும் பறித்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
இச்சம்பவம் தொடர்பாக முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். தப்பியோடிய 6 பேரையும் போலீஸார் தேடி வந்தனர்.
இந்நிலையில், இச்சம்பவத்தில் ஈரோடு ரயில்பணிமனை அருகே வசிக்கும் மணி (43) என்பவருக்கு தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.5.70 லட்சத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர்.