குறைகிறது அணைகளின் நீர்மட்டம்: மழைக்காக காத்திருக்கும் விவசாயிகள்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் பிசான பருவ சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. கார் பருவம் பொய்த்து விட்ட நிலையில் வடகிழக்கு பருவ மழை பெய்தால்தான் பிசான பருவ சாகுபடி செய்ய முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.
தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் தாமிரவருணி பாசனத்தில் கார் பருவ சாகுபடி செய்யவில்லை. இந்த நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. வடகிழக்கு பருவ மழை பெய்தால் மட்டும் பிசான பருவ சாகுபடி பணிகளை தொடங்க அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
புதன்கிழமை நிலவரப்படி பாபநாசம் அணையின் நீர்மட்டம் 43.15 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 56.27 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 44.60 அடியாகவும் இருந்தது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 61.69 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக தாமிரவருணி ஆற்றில் 404.75 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இதே நிலை நீடித்தால் 15 தினங்களில் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் நீர்இருப்பு வேகமாக குறைந்து வருகிறது என அணை வட்டாரங்கள் தெரிவித்தன. தென்மேற்கு பருவ மழை பொய்த்த காரணத்தால் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் நீர்வரத்து குறைந்து காணப்படுவதால் அணைகளுக்கு பெரிய அளவில் நீர்வரத்து இல்லை.
வடகிழக்கு பருவ மழை இம்மாத இறுதியில் தொடங்கி பெய்தால்தான் அணைகளுக்கு நீர்வரத்து கிடைக்கும். பிசான பருவ சாகுபடி செய்ய அணைகளில் தண்ணீர் திறக்க முடியும் என்ற நிலை காணப்படுகிறது.
கடந்த 50 வருட கால வரலாற்றில் தாமிரவருணி பாசனத்தில் விவசாயம் பொய்த்ததில்லை. கார் பருவம் பொய்த்து விட்டதால் இம்மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. பருவ மழை கை கொடுத்தால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு தண்ணீர் வழங்க முடியும்.