முகப்பு
தற்போதைய செய்திகள்

போலீஸ்காரர்கள் போல நடித்து ரூ.36 லட்சம் பறிப்பு:தங்கம் தருவதாக மோசடி செய்த 6 பேர் மீது வழக்கு

போலீஸ்காரர்கள் போல நடித்து ரூ.36 லட்சம் பறித்த 6 பேர் மீது ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:13 PM
பகிர்:

போலீஸ்காரர்கள் போல நடித்து ரூ.36 லட்சம் பறித்த 6 பேர் மீது ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கக் கட்டிகள் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவம் தொடர்பாக 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.
 ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அருகே வாய்க்கால்மேடு அடைப்புத் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (32). இவர் தனியார் காப்பீடு நிறுவனத்தில் முகவராகப் பணியாற்றி வருகிறார். 
 இவரது செல்போனுக்கு கடந்த 1 மாதத்துக்கு முன்பு தொடர்புகொண்ட ஒரு நபர், தங்களிடம் சுத்தமான தங்கக் கட்டிகள் கிலோ கணக்கில் உள்ளன. அதை குறைந்த விலைக்கு கொடுக்கத் தயாராக இருப்பதாகக் கூறியுள்ளார்.
 சில நாள்கள் கழித்து மீண்டும் தொடர்புகொண்ட அதே நபர், அதிக மதிப்புள்ள தங்கக் கட்டியை குறைந்த விலைக்கு (ரூ.60 லட்சம்) கொடுப்பதாகவும், அதை விற்றால் கோடிக்கணக்கில் லாபம் கிடைக்கும் என்றும் பேசினாராம். பேரம் பேசி ஒருவழியாக ரூ.36 லட்சத்துக்கு 3.5 கிலோ தங்கக்கட்டிகளை வாங்கிக்கொள்வதாக முருகேசன் ஒத்துக்கொண்டாராம்.
 இதை இரண்டு தவணையாக தருவதாக உறுதியளித்த முருகேசன், முதல் தவணையில் ரூ.15 லட்சத்தை சில நாள்களுக்கு முன்பு ஈரோடு ரயில் நிலையத்தில் வைத்து 2 பேரிடம் வழங்கினாராம். இதைப் பெற்றுக்கொண்ட அவர்கள் மீதமுள்ள பணத்தையும் தந்தால்தான் தங்கக் கட்டிகளை தர முடியும் என்று கூறியதால் மீதித்தொகை ரூ.21 லட்சத்துடன் வெள்ளிக்கிழமை ஈரோடு ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தார்.
 சென்னிமலை சாலையில் நின்றுகொண்டிருந்த 2 பேர், அவரை அழைத்துக்கொண்டு முத்தம்பாளையத்துக்குச் சென்றனர். பணத்தைப் பெற்றுக்கொண்ட அவர்கள் சிறிது நேரத்தில் தங்கக் கட்டிகளை எடுத்து வருவதாகக்கூறி ஒரு வீட்டுக்குள் சென்றார்களாம். 
 பின்னர் சிறிதுநேரத்தில் பதிவுஎண் இல்லாத காரில் போலீஸ் சீருடையில் வந்த 4 பேர், இங்கு நிற்கக்கூடாது என மிரட்டினார்களாம். ஏற்கெனவே வீட்டுக்குள் சென்ற 2 பேர், அப்போது திரும்பிவந்து முருகேசனை அழைத்துக்கொண்டு மீண்டும் ரயில் நிலையத்துக்கு வந்தனர்.
 வரும் வழியிலேயே போலீஸ்காரர்கள் பின்தொடர்ந்து விரட்டி வருவதால் பின்னர் தங்கக் கட்டிகளை தருவதாகக்கூறிவிட்டு தப்பிவிட்டார்களாம். முருகேசனிடம் இருந்த செல்போனையும் பறித்துவிட்டு அவர்கள் சென்றுவிட்டனர்.
 இச்சம்பவம் தொடர்பாக முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் ஈரோடு தாலுகா போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பியோடிய 6 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.