முகப்பு
தற்போதைய செய்திகள்

டெக்கான் அணி நீக்கத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு

ஐபிஎல் போட்டியிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதற்கு தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 7:17 PM
பகிர்:

ஐபிஎல் போட்டியிலிருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்டதற்கு தடை விதிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நிதி நெருக்கடியில் சிக்கிய டெக்கான் நிறுவனம் ரூ.100 கோடிக்கான வங்கி காப்புறுதியை அளிக்கத் தவறியதையடுத்து ஐபிஎல் போட்டியிலிருந்து சமீபத்தில் நீக்கப்பட்டது.

இதையடுத்து இரு தரப்பு இடையிலான பிரச்னையைத் தீர்த்துக் கொள்வதற்காக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட மத்தியஸ்தரான உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.கே.தாக்கரை அணுகியது டெக்கான் குழுமம். அதைத்தொடர்ந்து டெக்கான் அணியின் நீக்கத்துக்கு இடைக்கால தடைவிதித்த தாக்கர், இந்த விவகாரத்தில் பழைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து மும்பை உயர் நீதிமன்றத்தை நாடிய பிசிசிஐ, மத்தியஸ்தரின் உத்தரவுக்கு கடந்த 13-ம் தேதி தடைபெற்றது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. பிசிசிஐ, டெக்கான் தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி தணுக்கா, டெக்கான் அணியின் நீக்கத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டார். எனினும் டெக்கானின் நீக்கம் சட்டத்துக்கு உட்பட்டதுதானா என்பது குறித்து மத்தியஸ்தர் முடிவு செய்யலாம் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறியது: நீதிமன்றத்தைக் காட்டிலும் மத்தியஸ்தர் அதிக அதிகாரம் படைத்தவர் அல்ல. எனவே நீதிமன்ற உத்தரவை மீறி மத்தியஸ்தர் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. டெக்கான் நிறுவனம் இதுவரை ரூ. 100 கோடிக்கான வங்கி காப்புறுதியை அளிக்கவில்லை. எனவே டெக்கான் நிறுவனத்துக்கு சாதகமாக இடைக்கால உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது. இப்படிப்பட்ட சூழலில் டெக்கான் அணி நீக்கத்துக்கு தடை விதிக்குமாறு கோருவது சட்டத்தை மீறுவதாகும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பிசிசிஐ தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் ராஜூ சுப்பிரமணியன் வாதாடுகையில், "6ஆவது ஐபிஎல் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரலில் தொடங்குகிறது. டெக்கான் அணியில் ஏராளமான நட்சத்திர வீரர்கள் உள்ளனர். அவர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் சேர்க்கப்படாவிட்டால் வரும் ஐபிஎல் போட்டியில் அவர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும். டெக்கான் அணிக்கு போதுமான கால அவகாசம் கொடுக்கப்பட்டுவிட்டது. ஆனாலும் அவர்கள் வங்கி காப்புறுதியை செலுத்தத் தவறிவிட்டனர். அதனாலேயே வேறு அணியைத் தேர்வு செய்யும் நிலைக்கு பிசிசிஐ தள்ளப்பட்டது' என்று வாதிட்டார்.

டெக்கான் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.யு.கம்தார், "டெக்கான் நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. எனவே அணியை விற்பனை செய்ய டெக்கான் குழுமத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்' என்று வாதிட்டார்.

கடந்த 13-ம் தேதி மத்தியஸ்தர் உத்தரவுக்கு மும்பை உயர் நீதிமன்றம் தடை விதித்ததைத் தொடர்ந்து, டெக்கானுக்கு பதிலாக புதிய அணியைத் தேர்வு செய்யும் பணியில் பிசிசிஐ இறங்கியது. அது தொடர்பாக 12 நகரங்களை அடிப்படையாகக் கொண்டு புதிய டெண்டரையும் பிசிசிஐ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.