சிதம்பரத்தில் வெடிகுண்டு உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் கூலிப்படையினர் 6 பேர் கைது
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 நாட்டுவெடிகுண்டுகள், 4 வீச்சறிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள்
சிதம்பரத்தில் வழிப்பறியில் ஈடுபட சதித்திட்டம் தீட்டிய கூலிப்படையினர் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 4 நாட்டுவெடிகுண்டுகள், 4 வீச்சறிவாள்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் காசிராஜன், தனசேகர் உள்ளிட்ட போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை ரோந்து சென்றனர். அப்போது புறவழிச்சாலையில் கூத்தன்கோயில் பஸ்நிறுத்தம் அருகே போலீஸாரை கண்டு பதுங்கிய 6 பேரை போலீஸார் பிடிக்கச் சென்றனர். அப்போது அவர்களை போலீஸாரை தாக்க முயன்றனர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் 6 பேரையும் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிதம்பரம் அருகே உள்ள உத்தமசோழமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஸ்டாலின் (26), உசுப்பூர் பெரியத்தெருவைச் சேர்ந்த கிருபாகரன் (27), புதுச்சேரி ரெயின்போ நகரைச் சேர்ந்த டிராக் சிவக்குமார் (26), புதுச்சேரி வாண்டர்பேட்டையைச் சேர்ந்த பாண்டியன் (23), புதுச்சேரி தெற்கு அணைக்கரை வீதியைச் சேர்ந்த ஜெரால்டு (21), புதுச்சேரி முத்தையால்பேட்டையைச் சேர்ந்த எலிகார்த்தி (23) ஆகிய 6 பேரும் சேர்ந்து புறவழிச்சாலையில் வழிபறியில் ஈடுபட திட்டமிட்டது தெரியவந்து போலீஸார் அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 4 நாட்டுவெடிகுண்டுகள், 4 வீச்சரிவாள்கள், இரண்டு மோட்டார் சைக்கிள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் அண்ணாமலைநகர் போலீஸார் மேற்கண்ட 6 பேர் மீது வெடிகுண்டு மற்றும் பயங்கர ஆயுதங்கள் வைத்திருந்ததாக வழக்குப் பதிவு செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
கைது செய்யப்பட்ட புதுச்சேரியைச் சேர்ந்த டிராக் சிவக்குமார் மீது வெடிகுண்டு வீசியது, கொலை, கொலை முயற்சி, வழிபறி உள்ளிட்ட 17 வழக்குகள் உள்ளது. மற்றொரு ஜெரால்டு மீது ஒரு கொலை வழக்கும், கார்த்தி மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 6 வழக்குகளும், ஸ்டாலின் மீது அடிதடி வழக்கும் உள்ளது என இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.