தொடர் திருட்டு, வழிபறி: அச்சத்தில் சிதம்பரம் நகர மக்கள்!
கோயில் மற்றும் சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு, வழிபறி, கொலை உள்ளிட்ட சம்பவங்களால் நகர மக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர் திருட்டு, வழிபறி சம்பவங்களால் ஏற்பட்ட அச்சத்தில் சிதம்பரம் நகருக்கு வரும் சுற்றுலா
தொடர் திருட்டு, வழிபறி, கொலை சம்பவங்களால் சிதம்பரம் நகர மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
கோயில் மற்றும் சுற்றுலா நகரமான சிதம்பரம் நகரில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு, வழிபறி, கொலை உள்ளிட்ட சம்பவங்களால் நகர மக்களும், சுற்றுலா வரும் பயணிகளும் பெரும் அச்சத்தில் உள்ளனர். தொடர் திருட்டு, வழிபறி சம்பவங்களால் ஏற்பட்ட அச்சத்தில் சிதம்பரம் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. சிதம்பரம் கோட்டத்தில் போலீஸார் இரவு ரோந்து செல்லாததும், போதிய காவலர்கள் இல்லாததுமேதான இந்த தொடர் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்களுக்கு காரணம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
சிதம்பரம் சபாநாயகர்தெருவில் ஏஎஸ்பி அலுவலகத்தின் எதிரே உள்ள மெளனகுருசாமி மடத்தில் ஜன.25-ம் தேதி 42 பவுன் நகைகள், 15 ஆயிரம் ரொக்கம் மற்றும் வெள்ளி பொருள்கள் திருடு போயின. இதுநாள் வரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. மார்ச் 9-ம் தேதி சிதம்பரம் அருகே பொய்யாப்பிள்ளைச்சாவடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வாயில் துணியை வைத்து, கட்டிப்போட்டு 15 ரவுன் நகைரள் திரிடு போனது. அதேநாளில் சிதம்பரம் மேலவீதியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.15 ஆயிரம் திருடு போனது. மார்ச் 16-ம் தேதி பூண்டியாங்குப்பத்தில் ஜகந்நாதன் என்பவரது ஹோட்டலில் காவலாளியை தாக்கி ரூ.20 ஆயிரம் மதிப்பிலான கட்டுமானப் பொருள்கள் திருடுபோனது.
மார்ச் 26-ம் தேதி சிதம்பரம் முத்தையா நகரில் சீனுவாசன் என்பவரது மனைவி சந்திரலேகா காலை வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்மஆசாமிகள் 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். மார்ச் 27-ம் தேதி சிதம்பரம் சிவசக்திநகரில் ஓய்வுபெற்ற வேளாண் விரிவாக்க அலுவலர் வைத்தியலிங்கம் மனைவி மங்கையர்கரசி (55) என்பவரிடம் போலீஸார் எனக்கூறி மர்மஆசாமிகள் இருவர் 15 பவுன் நகைகளை நூதன முறையில் திருடிச் சென்றனர். ஏப்.3-ம் தேதி எம்.ஐ.நகரைச் சேர்ந்த ஸ்டீல் கார்பரேஷன் உரிமையாளர் முகமதுபாரி என்பவரை உருட்டை கட்டையால் தாக்கி ரூ.3 லட்சத்தை பறித்து சென்றனர்.
ஏப்.4-ம் தேதி சிதம்பரம் கமலீஸ்வரன்கோயில்தெருவில் மூதாட்டி பத்மாவதி அம்மாளை தாக்கி அவரிடமிருந்து 22 பவுன் நகைகளை பறித்துச் சென்றனர். அதேநாளில் முத்தையாநகரில் வசிக்கும் மருத்துவக்கல்லூரி மாணவர் சையத்அகரமிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.46 ஆயிரம் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் பொருள்கள் திருடு போனது. கீழரதவீதியில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் வங்கி உதவிமேலாளர் அனுசூயாவிடம் 2 பவுன் செயின் பறித்துச் சென்றனர். ஏப்.6-ம் தேதி அதிகாலை சிதம்பரம் பச்சையப்பன்பள்ளித்தெருவில் டாக்டர் சேதுராஜன் மனைவி ஹேமலதா வீட்டு வாசலில் கோலம் போட்டு உள்ளே நுழைந்த போது பின்தொடர்ந்த ஆசாமி கத்தியால் தாக்கி ஐந்தரை பவுன் தாலி சரடை பறித்துச் சென்றுள்ளார். இத்தொடர் திருட்டு மற்றும் வழிபறி சம்பவங்களால் நகர மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து சிதம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்தது: சிதம்பரம் நகரில் பட்டப்பகலிலேயே வீடு புகுந்து திருட்டும், வழிபறி சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக நடராஜர் கோயிலுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளிடம் தொடர்ந்து திருட்டு போவதால், சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்துவிட்டது. சிதம்பரம் பகுதியில் தொடர் திருட்டு, வழிபறி, கொலை சம்பவங்கள் ஏற்பட்டு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டதற்கு காரணம் சிதம்பரம் கோட்ட காவல்துறையினரின் மெத்தன போக்குதான். அதிகாரிகளும் இரவு ரோந்து செல்வதில்லை, போலீஸாரும் இரவு ரோந்து செல்வதில்லை. சிதம்பரம் பகுதியில் நடைபெறும் தொடர் திருட்டு, வழிபறி, கொலை சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் காவல்துறை மானியக்கோரிக்கையின் போது கேள்வி எழுப்பி முதல்வரிடம் தெரிவிப்பேன் என்கிறார் கே.பாலகிருஷ்ணன் எம்எல்ஏ.