விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம்: நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா வலியுறுத்தல்
வறட்சியினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வறட்சியினால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி மாவட்ட விவசாயிகளுக்கும் அரசு அறிவித்துள்ள நிவாரண உதவித் தொகை வழங்க வேண்டும் என திங்கள்கிழமை சேரன்மகாதேவியில் நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் செயற்க்குழு கூட்டம் அதன் தலைவர் எஸ். கட்டளைஜோதி தலைமையில் சேரன்மகாதேவியில் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலர் எஸ்.வி. குருசாமி, அமைப்பு செயலர் சுரேஷ் முன்னிலை வகித்தனர். சேரன்மகாதேவி ஒன்றிய தலைவர் சண்முகவேல் வரவேற்றார்.
கூட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலர் எஸ். சரவணபெருமாள், கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எஸ்.வி. அன்புராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் ராஜா மற்றும் ராதாபுரம், அம்பாசமுத்திரம், வள்ளியூர், பாளையங்கோட்டை ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: திருநெல்வேலி மாவட்டத்தில் பருவ மழை பொய்த்த காரணத்தால் கார் மற்றும் பிசான பருவத்தில் விவசாயிகள் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட இம்மாவட்ட விவசாயிகளுக்கும் அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணமாக ஏக்கருக்கு ரூ. 15,000 வழங்க வேண்டும்.
திருநெல்வேலியில் இருந்து சென்னை, கோவை உள்பட பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்களில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இந்த நிலையில் ரயில் கட்டணத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. ஆகவே ரயில்களில் பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்.
திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில் ரதவீதிகளில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலர் கூனியூர் கணேசன் நன்றி கூறினார்.