முகப்பு
தற்போதைய செய்திகள்

சிதம்பரம் நகர குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் கடும் வெய்யில் அடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததால் மேட்டூரிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காததாலும் இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடை, மடை பகுதியான

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:14 AM
பகிர்:

சிதம்பரம் பகுதியில் கோடைக்காலத்தில் குடிநீர் பற்றாக்குறையை போக்க நகராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும்.

கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் கடும் வெய்யில் அடிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே பருவ மழை பொய்த்ததாலும், கர்நாடகம் தண்ணீர் விட மறுத்ததால் மேட்டூரிலிருந்து நமக்கு கிடைக்க வேண்டிய நீரும் கிடைக்காததாலும் இந்த ஆண்டு கடலூர் மாவட்டத்தில் குறிப்பாக காவிரி டெல்டா கடை, மடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோயில் தாலுக்காக்களில் வறட்சியால் முழுமையாக விவசாயம் பாதிக்கப்பட்டது. தமிழகஅரசும் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கி வருகிறது.

தற்போது கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீராதாரமான வீராணம்ஏரி, பெருமாள்ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளில் நீர்வரத்து இல்லாததாலும், மழை இல்லாததாலும் நீர் குறைந்தளவே உள்ளது. 1915-ம் ஆண்டு திவான் பகதூர் செ.ராமசாமிசெட்டியார் வழங்கிய நன்கொடையால் தொடங்கப்பட்டது வக்காரமாரி குடிநீர் தேக்கத்திட்டம். காவிரி நீர் ராஜன்வாய்க்கால் மூலம் வக்காரமாரி கிராமத்தில் தலைமை குடிநீர் நிலையத்திற்கு நீர் தேக்கத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து சுமார் 6 கி.மீட்டர் தூரம் குழாய்கள் மூலம் சிதம்பரம் மேலவீதியில் உள்ள மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டிக்கு கொண்டு வரப்பட்டு சிதம்பரம் நகர மேற்கு பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

காவிரி நீரை நம்பியுள்ள சிதம்பரம் நகருக்கு குடிநீர் வழங்கப்படும் வக்காரமாரி குடிநீர் தேக்க குளத்திலும் தற்போது நீர் குறைந்தளவே உள்ளது. மேலும் வக்காரமாரி நீர் தேக்க குளத்திலிருந்து சிதம்பரம் நகருக்கு 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு உள்ள குடிநீர் கொண்டு வரும் குழாய்கள் நூறு ஆண்டுகளுக்கு மேலானதால் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு, அங்கிருந்து மேலவீதி நகராட்சி நீர்தேக்க தொட்டியில் நீரேற்றி சப்ளை செய்ய முடியாமல் போவதால், சிதம்பரம் நகரின் மேற்கு பகுதியில் தற்போது குடிநீர் பிரச்சனை தொடங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் குடிநீர் சப்ளை செய்து மக்களின் தேவையை பூர்த்தி செய்து வருகிறது. இருப்பினும் வக்காரமாரி நீர் தேக்கத்தில் உள்ள குளங்களில் குறைந்தளவே நீர் உள்ளது. இந்த நீரும் இன்னும் 15 தினங்களுக்கு வழங்குவதற்கு சரியாக இருக்கும் எனக்கூறப்படுகிறது.

எனவே நகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் வக்காரமாரி நீர்தேக்கத்தில் கூடுதலாக போர்வெல்கள் அமைத்தும், வக்காரமாரி நீர்தேக்கத்திலிருந்து சிதம்பரம் நகருக்கு வரும் பகிர்மான குடிநீர் குழாயை மாற்றி அமைக்க வேண்டும் என நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சிதம்பரம் அருகே உள்ள குமராட்சி பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை அமைத்து, கொள்ளிடம் ஊற்றுநீரை கொண்டு வந்து சிதம்பரம் நகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யலாம் என சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். எனவே நகராட்சி நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் இதனை கருத்தில் கொண்டு கோடைக்காலத்தில் குடிநீர் பஞ்சத்தை போக்கவும், நிரந்திர தீர்வாக கொள்ளிடம் ஊற்றுநீர் திட்டத்தை செயல்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.