அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் துறைவாரியான முறைகேடுகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் அரசு அதிகாரிகள் குழு தீவிரம்!
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு பல்கலைக்கழக அனைத்து துறைகளிலும் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை ஒழுங்குப்படுத்துவதற்காக செயலாற்றிக் கொண்டிருக்கும் தமிழகஅரசால் நியமிக்கப்பட்டுள்ள நிர்வாகி ஷிவ்தாஸ் மீனா ஐஏஎஸ் தலைமையிலான அதிகாரிகள் குழு பல்கலைக்கழக அனைத்து துறைகளிலும் நடந்துள்ள முறைகேடுகள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, பணி நியமனம், மாணவர்கள் அனுமதி சேர்க்கைக்கான இடங்களை வாங்கிக் கொடுக்கும் தரகர்களாக (புரோக்கர்கள்) செயல்பட்டோர் பற்றிய விவரங்களும் திரட்டப்பட்டு வருவதாக தெரிகிறது.
நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகத்தை சீர்படுத்தும் பணியில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஷிவ்தாஸ் மீனா தலைமையில் ஐந்து அதிகாரிகள் குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மாவட்ட வருவாய் அதிகாரிகள் பொறுப்பிலான இரு அதிகாரிகள் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் கிருஸ்துராஜ், முதன்மை கணக்கு அதிகாரியாக ரவிச்சந்திரன், மேலும் கணக்கியல் துறையில் அனுபவம் வாய்ந்த சீனிவாசன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர். பொது மற்றும் புலம்வாரியான கணக்குகள் மற்றும் வங்கித் தொடர்பான கணக்கு ஆகியவற்றை முறைப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து இக்குழு பணியாற்றி வருவதாக தெரிகிறது.
மேலும், தனிநபர் அல்லது அவரை சார்ந்த ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருந்துவந்த பல்கலைக்கழகத்தை மீட்டு இந்த பாரம்பரியமிக்க நிறுவனத்தின் நிர்வாக இயந்திரத்தை எவ்வித சிக்கலும் இன்றி சிறப்பாக இயங்கச் செய்ய வேண்டும் என்பதே இந்த அதிகாரிகள் குழுவின் மைய நோக்கம் என கூறப்படுகிறது. பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மாற்றப்பட்டுவிட்டதால், அந்த பொறுப்புக்கு வேறொருவரை தேர்வு செய்யும் பணியும் தொடங்கியிருப்பதாகவும் தெரிகிறது.