முகப்பு
தற்போதைய செய்திகள்

வக்கீல் குமாஸ்தா உடலை வாங்க மறுத்து தொடர் முழக்க போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் வக்கில் குமாஸ்தா ராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் எஸ்சி., எஸ்டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை போலீஸார் உடனடியாக கைது வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே விடுதலைச்

Updated On : 4 ஜனவரி, 2024 at 4:44 AM
பகிர்:

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை அடுத்த சம்மந்தம் கிராமத்தில் வக்கில் குமாஸ்தா ராஜா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட வழக்கில் எஸ்சி., எஸ்டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் குற்றவாளிகளை போலீஸார் உடனடியாக கைது வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் காந்திசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் உடலை பெற மறுத்து தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). வக்கீல் குமாஸ்தாவான இவர் கொலை செய்யப்பட்டு பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் உடல் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை காலை கண்டெடுக்கப்பட்டது. தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் வட்டாட்சியர் எம்.விஜயா முன்னிலையில் அரசு மருத்துவர்களை கொண்டு சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இந்நிலையில் ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கொலை செய்யப்பட்ட ராஜாவின் உடலை வாங்க மறுத்து பரங்கிப்பேட்டை அகரம் காலனி மக்கள் செவ்வாய்க்கிழமை இருமுறை சாலைமறியலில் ஈடுபட்டனர். ஏஎஸ்பி எம்.துரை மற்றும் போலீஸார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை வாபஸ் பெற்றனர். இருப்பினும் உடலை பெற மறுத்ததால் அண்ணாமலைநகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ராஜாவின் உடல் வைக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை எஸ்சி., எஸ்டி வன் கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உடலை பெற மறுத்து சிதம்பரம் காந்திசிலை அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை காலை தொடர் முழக்கப் போராட்டத்தை தொடங்கினர். கடலூர் தெற்கு மாவட்டச் செயலாளர் வ.க.செல்லப்பன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குறிஞ்சிவளவன், தமிழ்வளவன், கங்கை அமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் பா.தாமரைச்செல்வன், மேற்கு மாவட்டச் செயலாளர் தயாதமிழன்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமாறன், நிர்வாகிகள் செல்வமணி, வெற்றிவேந்தன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்று கண்டன உரையாற்றினர்.

பின்னர் சிதம்பரம் உதவிஆட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் உதவி ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. வட்டாட்சியர் எம்.விஜயா, ஏஎஸ்பி எம்.துரை, இன்ஸ்பெக்டர் பி.முருகானந்தம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர்கள் வ.க.செல்லப்பன், பா.தாமரைச்செல்வன், தயா.தமிழன்பன், முன்னாள் மாவட்டச் செயலாளர் திருமாறன், நகரமன்ற உறுப்பினர் பெரு.திருவரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பேச்சுவார்த்தையில் கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை உடனடியாக கைது செய்வதும், குற்றவாளிகளில் தலித் அல்லாத சமூகத்தினர் இருந்தால் எஸ்சி., எஸ்டி பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்வதாகவும் முடிவு செய்யப்பட்டது இதனை அடுத்து ராஜா உறவினர்கள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தை வாபஸ் பெற்று இன்று மாலை உடலை பெற்றுச் சென்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →