பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியது: அருவியில் குளிக்க அனுமதியில்லை
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் ஒரு வருடத்திற்கு பிறகு இன்று படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் பாணத்தீர்த்த அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்காததால்
திருநெல்வேலி மாவட்டம், பாபநாசம் அணையில் ஒரு வருடத்திற்கு பிறகு இன்று படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. ஆனால் பாணத்தீர்த்த அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி வழங்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மேற்குத் தொடர்ச்சி மலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தியாவின் 17 வது புலிகள் காப்பகமான களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இக்காப்பகம் கடையத்தில் இருந்து திருக்குறுங்குடி வரை 895 சதுர கி.மீ பரப்பளவில் அமையப்பெற்றுள்ளது. அரிய வகை விலங்கினங்களும், தாவர வகைகளும் இங்கு உள்ளது.காப்பகத்தில் மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அகஸ்தியர் அருவி, காரையார் பாணத்தீர்த்த அருவி, களக்காடு செங்கல்தேரி ஆகிய சுற்றுலாத் தலங்களும், பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளும் உள்ளன. இங்குள்ள அருவிகளில் ஆண்டு முழுவதும் தண்ணீர் விழுவதால் பல்வேறு பகுதியில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்கின்றனர்.
பாபநாசம் அணையில் 20 நிமிஷம் படகு சவாரி செய்து அக்கரைக்கு சென்று பாபநாசம் பாணத்தீர்த்த அருவியில் குளித்து மகிழலாம். அணையில் தனியார் படகு உரிமையாளர்கள் படகுகளை இயக்கி வருகின்றனர். 3 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரூ. 30 வீதம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அணையில் படகு சவாரி செய்ய சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.உச்சநீதிமன்றம் தடை விதிக்கப்பட்டதை அடுத்து கடந்த 2012 ம் ஆண்டு ஜூலை மாதம் 24 ம் தேதி புலிகள் காப்பகத்தில் சுற்றுலா செல்ல தடை விதிக்கப்பட்டது. பின்னர் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் புதிய நெறிமுறைகளை உருவாக்கியதை அடுத்து உச்சநீதிமன்றம் நிபந்தனைகளுடன் சுற்றுலா செல்ல அனுமதி வழங்கியது.
இதை தொடர்ந்து 2012 ம் வருடம் டிசம்பர் மாதம் 4 ம் தேதி மணிமுத்தாறு அருவி, பாபநாசம் அருவிகளுக்கு சுற்றுலா செல்ல வனத்துறை அனுமதி வழங்கியது. ஆனால் பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்க அனுமதி வழங்கவில்லை.இதனிடையே நீதிமன்ற அனுமதியுடன் இன்று பாபநாசம் அணையில் படகு போக்குவரத்து தொடங்கியது.